“தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை

 “தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை
 “தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை

ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு ‘கைலாசம்’ என பெயரிட்டு தனிநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு விடுதியில் ஆசிரமம் அமைத்து இந்தியாவிலும், உலக நாடுகளிலும் உள்ள ஆன்மிக பக்தர்களை கவர்ந்தவர் நித்யானந்தா. ஆனால் பாலியல் வன்கொடுமை, பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் கட்டியது, சிறுமிகளை வசியப்படுத்தி வைத்திருந்தது என தொடர்ச்சியாக எழுந்த புகார்கள் காரணமாக நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவை விலைக்கு வாங்கி தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக தங்கமும், பணமும் பக்தர்களிடம் இருந்து வசூல் செய்து, பல கோடி ரூபாய் கொடுத்து தீவை வாங்கியுள்ளார் நித்தியானந்தா.

பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து உத்தரப்பிரதேசம் சென்று அங்கிருந்து காரில் நேபாளம் சென்றுள்ளார் நித்யானந்தா. அங்கிருந்து தனி விமானத்தில் தான் வாங்கிய தீவுக்கு, 2 பெண் சீடர்கள் மற்றும் தற்போது குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தனன் சர்மாவின் மூத்த மகளுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் அந்த தீவுக்கு சென்றுள்ளனர். இதில் பெரும்பாலோனர் பெண்கள் என்று தெரிகிறது.

நித்யானந்தா வாங்கியிருக்கும் இந்தத் தீவுக்கு ‘கைலாசம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தீவை தனிநாடுபோல் நடத்த திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளை அமெரிக்காவைச் சேர்ந்த சட்டமைப்பு உதவியுடன் நித்யானந்தா பக்தர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தனக்கு என தனிக்கொடி, தனி பாஸ்போர்ட், தனி இலட்சினை போன்றவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தகவல் கிடைத்த பிறகுதான் நித்யானந்தா மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக, மத்திய அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

‘கைலாசம்’ தீவில் இலவச மருத்துவம், இலவசக் கல்வி வழங்கப்படும், யோகா, தியானம், ஆன்மிக மருத்துவம் வழங்கப்படும் என அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு என்ற முறையில் ‘கைலாசம்’ அமைதியான இறையாண்மை உள்ள சேவை அடிப்படையில் செயல்படும் என்றும், தூதரக நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டு உலக நாடுகளுடன் இணக்கமாக செயல்படுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com