ஆபரேஷன் சிந்தூர் | சாதித்த சிங்கப் பெண்.. யார் இந்த சோஃபியா குரேஷி?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இதற்குப் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்கள் கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஆவர்.
தாக்குதல் குறித்து சோஃபியா குரேஷி, ”பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இரவு 1.05 முதல் 1.30 வரை ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டன. நாங்கள் சாதாரண குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை. பயங்கரவாதத் தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்கள் குறிவைக்கப்பட்டனர். பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
யார் இந்த சோபியா குரேஷி?
இந்திய ராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் அதிகாரியாக 36 வயதான கர்னல் சோஃபியா குரேஷி செயல்பட்டு வருகிறார். குஜராத்தைச் சேர்ந்த இவர், உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1999ஆம் ஆண்டு ராணவத்தில் சேர்ந்த இவர், 2006இல் காங்கோவில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் பணியாற்றினார். 2010 முதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு 18 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச ராணுவப் பயிற்சியில் இந்தியாவின்படைப்பிரிவை வழிநடத்திய ஒரே மற்றும் முதல் பெண் அதிகாரி இந்த சோஃபியா குரேஷியே ஆவார். மேலும்,லெப்டினெண்ட் கர்னல் சோஃபியா குரேஷி, ஒரு பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முதல் முஸ்லிம் பெண் அதிகாரி ஆவார். ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தாத்தா, இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவரது கணவரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.