புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க புது சட்டம்.. மத்திய அரசு திட்டம்!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதில், சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடையும் ஒன்று. குடியேற்றக் கொள்கையில் பல கெடுபிடிகளைக் காட்டி வரும் ட்ரம்ப், இந்தியாவிற்கும் கருணை காட்டவில்லை. அதன்படி, அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்த 104 பேர் அடையாளம் காணப்பட்டு, முதற்கட்டமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் ராணுவ விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டு விமானத்தில் ஏற்றி அழைத்து வரப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி சசி தரூர், “சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது என்பது வழக்கமான நடவடிக்கைதான் என்றாலும், அவர்களை நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் 1,100 இந்தியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தற்போது நடத்தப்பட்டதைப்போல் யாரும் நடத்தப்படவில்லை” என்றார்.
இந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்காவின் சட்டப்படியே நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்கா நாடுகடத்துவது புதியது அல்ல.104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பும்போது கைவிலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது. இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்ந்து செல்பவர் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக 'Overseas Mobility (Facilitation and Welfare) Bill, 2024' என்ற மசோதா, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான வெளியுறவுக் கொள்கைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.