MELISSA | 300 கி.மீ. வேகத்தில் காற்று? 70 செ.மீ. மழை? ஜமைக்காவில் நூற்றாண்டின் மிகப்பெரும் சூறாவளி!
ஜமைக்காவில் மெலிசா சூறாவளி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், 70 செ.மீ. மழையை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஜமைக்கா அதிபர், நாட்டின் கட்டமைப்பு இதனை சமாளிக்க முடியாது என்று அச்சம் தெரிவிக்கிறார்.
கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் இருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக இருக்கின்றன. இந்த ஆண்டில் உலகம் காணாத மிகப்பெரும் சூறாவளி ஜமைக்காவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஐந்தாம் நிலை சூறாவளியாக மெலிசா வகைப்படுத்தப் பட்டுள்ளது.
பெரும் சூறாவளிகளை அடிக்கடி எதிர்கொள்ளாத ஜமைக்கா நாடு, 1988 க்குப்பின் எதிர்கொள்ளும் 3 ஆவது சூறாவளி இதுவாகும். மெலிசா சூறாவளி காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கரீபியன் தீவில் இதுவரை உருவானதிலேயே மிகப்பெரிய சூறாவளி என்றும் இந்த மெலிசா கருதப்படுகிறது. மெலிசாவின் பரப்பு, ஜமைக்காவை விட மிகப்பெரியதாக காணப்படுகிறது. இந்த சூறாவளி, இதுவரை காணாத அளவுக்கு 70 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது. இந்த மெலிசா சூறாவளி இந்த நூற்றாண்டில் அதிக சேதம் விளைவிக்கக் கூடியதாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஜமைக்கா அதிபர் அச்சம்..
சூறாவளியின் சீற்றத்தால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் சுமார், 28 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். இத்தகைய தீவிர சூறாவளியை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு கட்டமைப்பு ஜமைக்காவில் இல்லை என்று அந்நாட்டு அதிபர் அச்சம் தெரிவிக்கிறார்.
அண்டையில் உள்ள ஹைதி, டொமினிகன் குடியரசு நாடுகளும், மெலிசாவின் தாக்கத்தை ஏற்கனவே எதிர்கொண்டுவிட்டன.. தற்போது மெலிசா, தெற்கு ஜமைக்காவின் மையத்தில் இருக்கிறது. இச்சூறாவளியை செயற்கைக்கோள் வழியே பார்க்கும்போது இதன்அடர்த்தியும், பிரம்மாண்டமும் அச்சுறுத்தும் அளவுக்கு இருப்பதை காண முடிகிறது. Hurricane hunter விமானங்கள் மூலம், எடுக்கப்பட்ட சூறாவளியின் கண்ணையும் காண முடிகிறது.
ஜமைக்காவில் கரையை கடந்த பின் கிழக்கு கியூபா வழியாக பஹாமாஸ் Turks, மற்றும் Caicos பகுதிகளை மெலிசா சூறாவளி கடக்கும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மிகவும் மெதுவாக நகர்ந்துவரும் மெலிசா சூறாவளி எத்தகைய பேரிடரை ஏற்படுத்தப்போகிறதோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்..

