ரியாத் AIRPORT-ஐ குறிவைத்த ஹவுதிகள்? வான்வழி அச்சுறுத்தல்.. சவுதியில் பரபரப்பு!
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென கரும்புகை, தீப்பிழம்புகள் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன் ரியாத், அல்-கர்ஜ் பகுதிகளில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹவுதி தாக்குதல் என்ற சமூக வலைதள தகவலுக்கு அதிகாரப்பூர்வ உறுதி இல்லை. சில விமானங்கள் தாமதம் ஆனது.
செய்தியாளர் - M. மீரா
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே சனிக்கிழமை திடீரென கரும்புகையும் தீப்பிழம்புகளும் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ரியாத் மற்றும் அல்-கர்ஜ் பகுதிகளில் வான்வழி அச்சுறுத்தல் இருப்பதாக சவுதி சிவில் பாதுகாப்புத் துறை அவசர எச்சரிக்கை விடுத்திருந்தது.
ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே மிகப்பெரிய கரும்புகை எழுந்ததை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காட்டுகின்றன. விமான நிலைய சாலை மற்றும் முனையக் கட்டிடங்கள் பின்னணியில் தெரியும் நிலையில், ஒரு பகுதியில் தீப்பிழம்புகள் எழுந்ததாகவும் Reuters தெரிவித்துள்ளது.
விமான நிலையம் அருகே தீப்பற்றியதற்கான சரியான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. மேலும், விமான நிலையமே தாக்கப்பட்டதா என்பதையும் சவுதி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சமூக வலைதளங்களில் ஹவுதி படைகள் விமான நிலையத்தைத் தாக்கியிருக்கலாம் என்ற தகவல்கள் பரவினாலும், அதிகாரப்பூர்வமாக இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த சம்பவத்தின் தாக்கம் விமானப் போக்குவரத்திலும் காணப்பட்டது. சில விமானங்கள் தாமதமானதுடன், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான கண்காணிப்பு தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும், பின்னர் விமானங்கள் ரியாத் விமான நிலையத்தில் தொடர்ந்து இயக்கப்பட்டன. எனவே விமான நிலையம் முழுமையாக மூடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஏமனில் செயல்படும் ஹவுதி படைகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் ரியாத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரும்புகைக்கான காரணமும், அது வான்வழி அச்சுறுத்தலுடன் நேரடியாக தொடர்புடையதா என்பதும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

