ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் ஹவுதி குழு? மூடப்படும் மற்றொரு ஜலசந்தி?
ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை பகுதியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில், ஹவுதி குழு பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூட வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இது உலக வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போரில், போர் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணை பகுதியையும் ஈரான் முடக்கியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தப் பாதிப்பை சரி செய்ய ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கும் குறுகிய கால அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், இப்போது கவனம் அப்பகுதியில் உள்ள மற்றொரு ஜலசந்தியான பாப் எல்-மண்டேப் மீது திரும்பியுள்ளது. தெஹ்ரானுக்கு ஆதரவு அளிக்கும் ஏமன் ஹவுதி குழு தங்கள் விரல்கள் துப்பாக்கியின் ட்ரிக்கரில் (TRIGGER) இருப்பதாகவும் தேவை வந்தால் அதை அழுத்துவோம் எனவும் கூறியுள்ளனர்.
அவ்வாறு ஹவுதிகள் போரில் இணைந்தால் உலகளாவிய வர்த்தகத்தின் மற்றொரு முக்கியமான ஜலசந்தி பாப் அல் மந்தப் (BAB EL MANDEB)ஐ மூட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. சவுதி அரேபியாவை ஒட்டியுள்ள இந்த ஜலசந்தி மூலம் உலகின் 10% எரிபொருள் கப்பல்கள் போக்குவரத்து நடைபெறுகிறது. பாப் எல்-மண்டேப் செங்கடலையும், இந்தியப் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும், மேலும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்தப் பாதை ஆசியா-ஐரோப்பா வர்த்தகத்திற்கு முக்கியமானது.
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்ததால், உலகளாவிய ஊடகங்கள் சில, ’ஈரான் போரில் ஹவுதிகள் இணைவார்களா?’ ’ஏன் ஏமன் போர்முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது’ என்று தலைப்புச் செய்திகள் வெளியிட்டன.
தெஹ்ரானால் நீண்டகாலமாக ஆதரிக்கப்பட்டு, ஆயுதம் ஏந்தி வளர்க்கப்பட்ட ஏமனை தளமாகக் கொண்ட ஹவுதிகள் போரில் இணைந்தால், அது மற்றொரு முக்கியமான நீர்வழியான பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை முடி உலக வர்த்தகத்தை திணறடிக்கக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில் இது உலக வர்த்தகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும். அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும். பாப் எல்-மண்டேப் மூடப்பட்டால், உலகளாவிய வர்த்தகம் ஒரு பெரிய அதிர்ச்சியை எதிர்கொள்ளும். உலகின் கடல்வழி எண்ணெய்யில் சுமார் 30% சரக்குகள் ஹார்முஸ் மற்றும் பாப் எல்-மண்டேப் வழியாக செல்கின்றன.

