சவுதிக்கே கண்டிஷன் போட்ட ஹவுதி.. அதிர்ச்சியில் மத்திய கிழக்கு.. கவனம் பெறும் Bab-el-Mandeb!!
ஈரானில் இருந்து ஹவுதி பிரதிநிதிகள் குழு பயணித்தவிமானத்தைத் தடுக்கும் நோக்கில், கடந்த வாரம் ஏமன் தலைநகர் சனா (sanaa) விமான நிலையம் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, தெற்கு சவுதி அரேபியாவின் அப்ஹா (abha) விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்திகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, தற்போது சவுதி அரேபியாவுக்கு எதிராக கடற்படை முற்றுகையையும் ஹவுதிக்கள் அறிவித்திருப்பது, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
'கண்ணுக்குக் கண்' என்ற கொள்கையின் அடிப்படையில், குற்றவாளியான சவுதி அரேபியாவுக்கு எதிராக, கடல்வழித் தடையை கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்" என்று ஏமான் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ (Yahya Saree) ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், ஏமானின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை" முற்றுகையிட்டதற்கும் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், “சவுதியின் இந்த முற்றுகைக்கு முற்றுகையின் மூலமே பதிலடி கொடுப்போம்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரில் ஹார்முஸ் நீரிணை முடங்கியிருக்கும் நிலையில், ஹவுத்திகளின் இந்த அறிவிப்பால், உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான பாப் அல்-மந்தப் ஜலசந்தி (Bab-el-Mandeb) மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. செங்கடலையும் ஏமன் வளைகுடாவையும் இணைக்கும் இந்த கடல் வழியாக உலக வர்த்தகத்தின் கணிசமான பகுதியும், வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதியும் நடைபெறுகிறது. இந்த பாதையில் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டால், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஹவுத்திகள் செங்கடலில் பல கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவுக்கு எதிராக நேரடியாக கடல் முற்றுகை அறிவித்திருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
பாப் அல்-மண்தப் நீரிணை முழுமையாக மூடப்படுவதால், சவூதியின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் இப்பகுதியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் 7% குறையும் என அஞ்சப்படுகிறது. வளைகுடாப் போரினால் ஏற்கனவே உலகளாவிய விநியோகத்தில் 10% குறைக்கப்பட்ட நிலையில், இந்த இடையூறு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுவரை இந்த அறிவிப்புக்கு சவுதி அரேபியா அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கை வளைகுடா பிராந்தியத்தில் புதிய ராணுவ மோதல்களுக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹவுத்திகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும், அதற்கு சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எவ்வாறு பதிலளிக்கும் என்பதையே உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

