ஹார்முஸில் கண்ணிவெடிகள்.. அடுத்தடுத்து சிக்கும் கப்பல்கள்.. ஈரான் சொல்வது என்ன?
ஈரான் எச்சரிக்கையை மீறிய கப்பல்களுக்கு தாக்குதல். ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் காரணமாக எண்ணெய் கப்பல்கள் சேதம். அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் நடப்பதுடன், பதற்றம் தொடர்கிறது.
செய்தியாளர் - M.மீரா
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதித்ததாகக் கூறப்படும் ஓமன் கடற்கரை அருகிலுள்ள தெற்குப் பாதையைப் பயன்படுத்திக் கப்பல்கள் பயணித்து வருகின்றன. ஆனால், இந்த பாதையை பயன்படுத்துவதை ஈரான் அனுமதிக்கவில்லை அதனால் எச்சரிக்கை விடுத்துள்ளது. எண்ணெய் ஏற்றுமதிக்காகப் புதிய கடல் வழிகளை உருவாக்க முயலும் நாடுகளின் நடவடிக்கைகள் விரோதச் செயல்களாகக் கருதப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாத அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பேச்சுவர்த்தை குறித்து அமெரிக்கா அளித்த பதில் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரான் முன்வைத்துள்ள ஏழு நாள் திட்டம் தொடர்பாக அமெரிக்காவின் கருத்துகளை ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த சில நாட்களில் பதில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஈரானின் தாக்குதல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி மற்ற கடல் பகுதிகளுக்கும் விரிவடைகின்றனவா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பகுதியில் ஏற்கெனவே தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு எண்ணெய் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்லக்கூடியதும் , மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பலான விஎல்சிசி (VLCC) மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கத்தார் நாட்டின் வடக்கே சுமார் 51 கடல் மைல் தொலைவில் சென்ற எண்ணெய் கப்பல் மீது பல எறிபொருட்கள் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தாக்குதலுக்கான காரணம், கப்பலின் அடையாளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை.
செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 5 வரையில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கப்பல்கள் மீது குறைந்தது 12 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . போர் தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு கடந்த வாரம் மட்டும் அதிகமான எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது பிரிட்டனின் UKMTO அமைப்பும் அக்டோபர் மாதத்தில் மட்டும் அந்தப் பகுதியில் ஒன்பது தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புகள், எண்ணெய் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதியதால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஈரான் தடை செய்துள்ள அல்லது அனுமதியில்லாத பாதைகளைப் பயன்படுத்திய கப்பல்களே இந்தத் தாக்குதலுக்குள்ளாகி உள்ளது என்றும் அச்செய்தி அறிக்கை கூறுகிறது.

