ஈரான் கையில் ஹார்முஸ்.? அமெரிக்காவுக்கு புதிய சிக்கல்! பரபரக்கும் அதிரடி ஒப்பந்தம்?
செய்தியாளர் - ஐடா அருட்செல்வி
தாக்குதல்கள், உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் என அமெரிக்கா-ஈரான் போர் ஒட்டுமொத்த உலகையே கவலைக்குள்ளாக்கி இருப்பது உண்மையே. போர் முடிவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய புள்ளியை அடைந்திருக்கிறது.
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் புதிய கடற்பாதைகளுக்கான புவியியல் ஒருங்கிணைப்பு குறித்து ஓமனும் ஈரானும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நபருமான முகம்மது பாகர் காலிபாப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் மேற்கொள்வது "நாடக ராஜதந்திரம்" என்றும், ஐந்து மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஓமனின் வழியாக முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் இறுதி ஒப்புதலை ஈரான் எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஹார்முஸ் நீரிணை, உலகின் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு போக்குவரத்தில் மிக முக்கியமான பாதையாகும். அமைதிக் காலங்களில் உலகின் மொத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், மத்திய கிழக்குப் போரின் பதற்றப் பகுதியாக இது மாறியுள்ளது.
சமூக வலைதளமான X-இல் பதிவிட்ட காலிபாப், "பெரும் தாக்குதல் வரப்போகிறது என்று தொடர்ந்து மிரட்டுவது, அச்சுறுத்தல், உடைந்த வாக்குறுதிகள் மற்றும் போலிச் செய்திகளை ஆயுதமாகப் பயன்படுத்துவது தோல்வியடைந்த உத்தி. உண்மையை ஏற்றுக்கொண்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். மேலும் நாடகம் தேவையில்லை," என்று டிரம்பை மறைமுகமாக விமர்சித்தார்.
இதுவரை இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை. இருப்பினும், ஹர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் ஒப்பந்தம் விரைவில் உருவாகும் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தகப் பாதையின் கட்டுப்பாடு ஈரானின் கையில் செல்லும் வகையிலான எந்த ஒப்பந்தத்தையும் அமெரிக்கா ஏற்காது என்று அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் எதிர்ப்பு நாடுகளின் கப்பல்களை ஹர்முஸ் நீரிணையில் செல்லத் தடை விதிக்கும் சட்ட முன்வடிவை ஈரான் நாடாளுமன்றக் குழு ஆய்வு செய்து வருவதாக Fars News Agency தெரிவித்துள்ளது. அந்த முன்மொழிவின்படி, விதிகளை மீறும் கப்பல்களுக்கு அவர்கள் ஏற்றிச் செல்லும் சரக்கின் மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடியும்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களிடம் சரக்கின் மதிப்பில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்க ஈரான் விரும்புவதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது. ஓமன் சுமார் 3 சதவீத கட்டணத்தை முன்வைத்துள்ளதாகவும், ஆனால் அமெரிக்கா எந்தவித கட்டணமும் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், ஹர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறும். இது பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போருக்குப் பிறகு, பிராந்திய அதிகாரச் சமநிலை ஈரானுக்கு சாதகமாக மாறியிருப்பதற்கான முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. போருக்கு முன்பு, எந்தவித கட்டணமும் இல்லாமல் அனைத்து கப்பல்களும் இந்த நீரிணையை சுதந்திரமாக பயன்படுத்தி வந்தன.
இதனிடையே, தன் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளதாக ஐந்து தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி Reuters தெரிவித்துள்ளது. "அமெரிக்கா ஈரானின் உள்கட்டமைப்புகளைத் தாக்கினால், அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பது ஈரானின் தெளிவான எச்சரிக்கை," என்று ஒரு வளைகுடா நாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதியின்றி செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், லாஸ் வேகாஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், "எனக்கு போரை விட ஒப்பந்தம்தான் விருப்பம். நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அதற்கான நிலை உருவாகலாம்," என்று கூறினார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போருக்குப் பிறகு, ஈரானில் 3,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. மறுபுறம், இந்த மோதலில் அமெரிக்காவின் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

