ISS-ல் வரலாறு படைத்த அனில் மேனன்.. முதல் Spacewalk பிரமாண்ட வெற்றி.. நாசாவின் புதிய சாதனை!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
நம் அறிவுக்கு எட்டாத இந்த அகண்டு விரிந்த விண்வெளியில் மனித இனம் அவ்வப்போது தனது கையொப்பத்தை இடுகிறது. அந்த வகையில் தான் தற்போது ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பவர் நம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதில் நமக்கு பெருமையே.
நாசாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன் மற்றும் விண்வெளி வீராங்கனை ஜெசிகா மேயர் ஆகியோர், ISS அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே சுமார் 6 மணி 27 நிமிடங்களுக்கு விண்வெளி நடை என்று சொல்லப்படும் Spacewalk மேற்கொண்டுள்ளனர். அச்சமயம் புதிய சூரிய மின்தகடுகளை நிறுவுவதற்கான முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை வெற்றிகரமாக நிறைவும் செய்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட 281-ஆவது விண்வெளி நடை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெசிகா மேயருக்கு இது ஆறாவது Spacewalk என்றாலும், அனில் மேனனுக்கு இது முதல் விண்வெளி நடை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணி அமெரிக்க கிழக்கு நேரப்படி வியாழக்கிழமை காலை 8.33 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது. இந்திய நேரப்படி சொல்ல வேண்டும் என்றால் மாலை 6.03 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
விண்வெளி வீரர்கள், ISS-இன் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அறை (Quest Airlock) வழியாக வெளியேறி, Starboard 6 Truss பகுதியில் அமைந்துள்ள 3B மின்சார சேனலில் புதிய சூரிய மின்தகடுகளை பொருத்துவதற்கான மவுண்டிங் உபகரணங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டனர். இந்த கட்டமைப்பு, எதிர்காலத்தில் IROSA அதாவது International Space Station Roll-Out Solar Arrays எனப்படும் புதிய சுருட்டி விரிக்கக்கூடிய சூரிய மின்தகடுகளை நிறுவுவதற்கான அடித்தளமாக அமையும்.
இந்த புதிய IROSA அமைப்புகள் மூலம் விண்வெளி நிலையத்தின் மின்சார உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இதனால் ஆய்வகத்தின் முக்கிய அமைப்புகள் தடையின்றி செயல்படுவதோடு, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பூமியின் வளிமண்டலத்திற்குள் கொண்டு வந்து Controlled Deorbit என்று சொல்லப்படும் செயலிழக்கச் செய்யும் திட்டத்திற்கும் தேவையான மின்சாரம் கிடைக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆறு IROSA அமைப்புகள் விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு புதிய சூரிய மின்தகடுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் ISS-க்கு அனுப்பப்பட உள்ளன.
இந்த விண்வெளி நடையின்போது, அனில் மேனன் Articulating Portable Foot Restraint என்று சொல்லப்படும் சிறப்பு அடிதாங்கி அமைப்பில் நிலைநிறுத்தப்பட்டு, விண்வெளி நிலையத்தின் Truss பகுதியை எளிதாக அடைந்து கட்டமைப்பு நிறுவும் பணிகளை மேற்கொண்டார். மேலும், எதிர்காலத்தில் புதிய IROSA அமைப்புகளில் இருந்து 3B மின்சார சேனலுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களையும் இரு வீரர்களும் பொருத்தினர். பின்னர், அந்த கட்டமைப்பின் தாங்கு கம்பிகளை பல அடுக்குகள் கொண்ட வெப்பக் காப்பு மூலம் மூடி பாதுகாப்புப் பணிகளையும் நிறைவு செய்தனர்.
பணியின் ஒரு கட்டத்தில், விண்வெளி வீராங்கனை ஜெசிகா மேயர், அனில் மேனனிடம் நிலவைச் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த அனில் மேனன், 'ஆம், எனது வலது பக்கத்தில் நிலவைப் பார்க்கிறேன். தகவல் தெரிவித்ததற்கு நன்றி. அங்கே எதிர்கால நிலவுத் தளம் ஒன்றை என்னால் கற்பனை செய்ய முடிகிறது,' என்று உற்சாகமாகக் கூறினார்.
இந்த விண்வெளி நடை, Expedition 75 குழுவுக்காக இந்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள மூன்று விண்வெளி நடைகளில் முதலாவதாகும். இரண்டாவது விண்வெளி நடை ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஹாஸ்டனில் உள்ள Mission Control மையத்திற்கும் ISS-க்கும் இடையே அதிவேக தகவல் தொடர்பை வழங்கும் முக்கிய Space-to-Ground ஆண்டெனா மாற்றப்படும்.
மூன்றாவது விண்வெளி நடை ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மின்சார சேனல் கேபிள்கள், தரவு பரிமாற்ற அமைப்புகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், விண்வெளி நிலையத்தை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயலிழக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். மேலும், Harmony Module-இன் முன்பகுதியில் விண்கலங்கள் இணைவதற்கு பயன்படும் Navigational Aid அதாவது வழிகாட்டி சாதனமும் புதியதாக மாற்றப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

