1945 | ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய அமெரிக்கா! உலகின் அதிபயங்கர தாக்குதலின் 80ஆம் ஆண்டு நிறைவு
செய்தியாளர் சேஷகிரி
உலக வரலாற்றில் அதிபயங்கர தாக்குதல் நடைபெற்று இன்றுடன் (6.8.25) 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த நிகழ்வு என்ன... பார்க்கலாம்... அது 1945ஆம் ஆண்டு... ஆகஸ்ட் 6ஆம் தேதி.... காலை சுமார் 8 மணி... ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அமெரிக்க விமானம் லிட்டில் பாய் என்ற அணுகுண்டை வீசியது... இதைத்தொடர்ந்து பேரிரைச்சலுடன் கூடிய பிரமாண்ட புகை மண்டலம் எழுந்தது. இத்தாக்குதலில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர். அப்பகுதியில் வசித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இறந்துவிட்டனர். இது மட்டுமல்ல... கதிர்வீச்சின் தாக்கம் இன்று வரை மக்களை தலைமுறை தலைமுறையாக பாதித்து வருகிறது. புற்றுநோய் உட்பட பல நோய்களின் பிடியில் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். அணுகுண்டின் கோர முகத்தை உலகிற்கு முதன்முதலாக காட்டிய நிகழ்வு இதுவே. அதிகாரப்போரே இந்த அவலத்திற்கு காரணமாக அமைந்தது. 2ஆம் உலகப்போரில் அமெரிக்காவின் பெர்ல் ஹார்பரை ஜப்பானிய படைகள் தாக்கின.
இதற்கு பதிலடி தர முடிவெடுத்த அமெரிக்கா தேர்ந்தெடுத்த ஆயுதமே அணுகுண்டு. ஆகஸ்ட் 6இல் ஹிரோஷிமாவில் ஒரு குண்டும் ஆகஸ்ட் 9இல் நாகசாகியில் ஒரு குண்டும் வீசியதில் முற்றிலும் நிலைகுலைந்தது ஜப்பான். பாதிப்பின் வீச்சை தெரிந்துகொள்ளவே சில நாட்கள் ஆகிவிட்டன. 6 நாட்களுக்கு பின் ஜப்பானிய படைகள் சரணடைந்த நிலையில் 2ஆம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுசக்தி என்பது இரு முனைக்கத்தி போன்றது என்பதை உலகம் உணர்ந்து 80 ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும் இன்னும் அணுகுண்டுகள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 9 நாடுகளிடம் சுமார் 10 ஆயிரம் அணுகுண்டுகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. போர்களில் பயன்படுத்துவதற்காக அணுகுண்டுகள் என்ற நிலை மாறி அணுகுண்டு தொடர்பான அச்சங்களே போருக்கு காரணமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையின் பெரும் வரமான அணுசக்தி ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே என்ற நிலை, என்று வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர் அமைதி விரும்பிகள்.