போரின் சாட்சியம் to வறுமையின் கொடூர முகம் - உலகை ‘உலுக்கிய’ 25 புகைப்படங்களின் தொகுப்பு

போரின் சாட்சியம் to வறுமையின் கொடூர முகம் - உலகை ‘உலுக்கிய’ 25 புகைப்படங்களின் தொகுப்பு
போரின் சாட்சியம் to வறுமையின் கொடூர முகம் - உலகை ‘உலுக்கிய’ 25 புகைப்படங்களின் தொகுப்பு

உலக வரலாற்றில் புகைப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக முக்கியமானது. உலகின் பல போர்களை தூண்டியதும், பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததும் ஒற்றை புகைப்படம்தான். உலக புகைப்பட தினமான இன்று, உலகை உலுக்கிய 25 புகைப்படங்கள் பற்றிய தொகுப்பு...

1) சிறுமியை திண்ண காத்திருக்கும் கழுகு(1993):

உலகின் மனசாட்சியையே உலுக்கி சூடான் நெருக்கடியைக் கவனிக்க வைத்த மிக சோகமாக படம் இது. ஊட்டச்சத்து இல்லாத சிறுமி இறப்பதற்காக கழுகு பொறுமையாக காத்திருப்பது இப்படத்தில் பதிவாகியிருந்தது. மார்ச் 1993 இல் தி நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட இந்த படம் சூடான் மக்களுக்கு உதவிகளை பெற்று தந்தது. இந்த படம் புகைப்படக் கலைஞர் கெவின் கார்டரால் எடுக்கப்பட்டது, இவர் பல விருதுகளை வென்றார், ஆனால் இந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

2) ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டுகள்( 1945):

1945 இல் ஜப்பானின் மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியபோது, அது ஆறு வருட உலகப்போரை கிட்டத்தட்ட ஒரு நொடியில் நிறுத்தியது. இந்த குண்டுவெடிப்பின் படம், குண்டு வீசிய விமான குழுவினரால் எடுக்கப்பட்டது.

3) வியட்நாம் போரின் சாட்சியம்( 1973):

1973 ஆம் ஆண்டு தெற்கு வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட படம் இது.  போரினால் பாதித்த மக்கள் வியட்நாமிலிருந்து தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதை சித்தரித்த இந்த படம் உலகை உலுக்கியது. இந்த ஒன்பது வயது கிம் ஃபெக் என்ற பெண்ணில் ஆடைகள் போரில் எரிந்துவிட்டது. நிக் உட் என்பவர் இந்த படத்தை எடுத்தார்.

4) கருப்பினத்தவர்களின் எழுச்சி(1968):

மெக்சிகோ நகரில் 1968 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஆப்பிரிக்க-அமெரிக்க விளையாட்டு வீரர்கள் டோமி ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் வெற்றிபெற்று தங்கள் முஷ்டிகளை உயர்த்தினர். விளையாட்டு வரலாற்றில் எடுக்கப்பட்ட மிக வெளிப்படையான அரசியல் படமாக இந்த படம் வரலாற்றில் பதிவானது. ஸ்மித் தனது சுயசரிதையில் அது ஒரு கருப்பினத்தவர்களின் வணக்கம் அல்ல, மாறாக ஒரு மனித உரிமை வணக்கம் என தெரிவித்தார். இந்த படம் ஜான் டோமினிஸ் என்பவரால் எடுக்கப்பட்டது.

5) உயிரை துறந்த துறவி(1963):

1963ஆம் ஆண்டு வியட்நாமை சேர்ந்த புத்த துறவி, திச் குவாங் டக், தெற்கு வியட்நாமிய அரசாங்கத்தின் புத்த துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, போக்குவரத்து நெரிசல் மிக்க சைகான் சாலை சந்திப்பில் தீக்குளித்தது உலகையே உலுக்கியது. மால்கம் ப்ரவ்னி என்பவர் இந்த படத்தை எடுத்தார்.

6) உலகின் முதல் செல்ஃபி (1839). இது மனிதனின் ஆரம்பகால புகைப்படங்களில் ஒன்றாகும், 1839 இல் எடுக்கப்பட்ட முதல் சுய உருவப்படம், பிலடெல்பியாவில் உள்ள அவரது குடும்பத்தின் விளக்கு தயாரிக்கும் கடைக்கு வெளியே ஒரு இளம் ராபர்ட் கார்னிலியஸ் (1809-1893) நிற்பதை இப்படம் காட்டுகிறது.

7) எர்த்ரைஸ்( 1968):

1968 ஆம் ஆண்டு நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து அப்பல்லோ 8 விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் எடுத்த "எர்த்ரைஸ்"  என்ற இந்த படம் இதுவரை எடுக்கப்பட்ட மிகவும் செல்வாக்குள்ள சுற்றுச்சூழல் புகைப்படம் என்று கொண்டாடப்படுகிறது.

8) இரட்டை கோபுர தாக்குதல்(2001):

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, அசோசியேட்டட் பிரஸ் புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் ட்ரூவால் எடுக்கப்பட்ட படம். இது 106 வது மாடியில் பணிபுரிந்த ஜொனாதன் பிரிலியின் தலைகீழாக விழும் போது எடுக்கப்பட்ட படம் என்று கருதப்படுகிறது.

9) வாழ்க்கை எப்படி தொடங்குகிறது (1965):

எண்டோஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட முதல் படம், "வாழ்க்கை எப்படி தொடங்குகிறது" என வயிற்றில் இருக்கும் குழந்தையின் படம். இந்த படம் லைஃப் பத்திரிகையின் 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அட்டைப்படத்தில் வெளிவந்து நான்கு நாட்களில் 8 மில்லியன் பிரதிகள் விற்றது. இந்த படத்தை லென்னர்ட் நில்சன் என்பவர் எடுத்தார்.

10) சைகோன் மரணதண்டனை - 1968

இந்த படம், அமெரிக்க புகைப்பட கலைஞர் எடி ஆடம்ஸால் எடுக்கப்பட்டது. தேசிய விடுதலை முன்னணி உறுப்பினர் நிகுயென் வான் லெம், தெற்கு வியட்நாமிய ஜெனரலால் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் எதிரொலித்து, போரின் கொடூரத்தை மக்களுக்கு காட்டியது.

11) 1937 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி ஹிண்டன்பர்க்கில் நடந்த மிகப்பெரிய விமான விபத்து உலகை உலுக்கியது. இந்த ஏர்ஷிப் விபத்து மிகவும் பெரியதாக இருந்தது, இது ஏர்ஷிப்களை முடிவுக்கு கொண்டுவந்தது.

12) லண்டன் இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஜான் லெனான் தனது வருங்கால கொலையாளி மார்க் சாப்மேனுக்கு, அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஆட்டோகிராப் இட்ட படம் (1980)

13) ஒரு ஜெர்மன் சிப்பாய் தனது குடும்பத்தை காண வீடு திரும்பினார். அவரது இடிந்த வீடு மட்டுமே இருந்தது, குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை - பிராங்பேர்ட் (1946)

14) ருவாண்டா படுகொலை - ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் ஹூட்டஸின் குழு டுட்ஸிகளை இனப்படுகொலை செய்து 8,00,000 பேரைக் கொன்றது. இந்த புகைப்படம் குழந்தைகளின் இரத்தம் தோய்ந்த பாதங்களை சுவர்களில் ஏறி தப்பிக்க முயற்சிப்பதை காட்டுகிறது. (1994)

15) இந்த ஈராக்கியக் கைதி தனது 4 வயது மகனை ஆறுதல்படுத்த முயன்றபோது, அந்த சிறுவன் தனது தந்தையின் கைவிலங்கை கண்டு பயந்தான். அவரது கைகளை விடுவிப்பதற்கான கோரிக்கையை இராணுவம் ஏற்று மகனை தழுவ அனுமதித்தது(2003).

16) டெட்டான்கள் மற்றும் பாம்பு ஆறு (1942):

அமெரிக்க்காவின் ஆன்சல் ஆடம்ஸ் என்ற புகைப்பட கலைஞர் எடுத்த "டெட்டான்கள் மற்றும் பாம்பு நதி" என்ற புகைப்படம், அமெரிக்காவின் தனித்துவமான படங்களில் ஒன்றாக மாறியது.

17) நிலவில் கால்வைத்த மனிதன்(1969):

நிலவில் முதலில் கால்வைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரினை நிலவின் மேற்பரப்பில் ஜூலை 20, 1969 அன்று எடுத்த படம் இது.

18) போர் சூழ்ந்த பார்வை( 1984):

உலகையே உலுக்கிய ஆப்கானிஸ்தான் பெண்ணின் இந்த புகைப்படம் ஸ்டீவ் மெக்கரி என்ற புகைப்படக்காரரால் எடுக்கப்பட்டது, 1984 இல் சோவியத்-ஆப்கானிஸ்தான் போர் பற்றிய தகவல்களை சேகரிக்கும் போது அவர் இந்த படத்தை எடுத்தார்.

19) உலகப்போரை வென்ற முத்தம்(1945)

ஆகஸ்ட் 14, 1945 அன்று நியூயார்க்கில் ஆல்ஃபிரட் ஐசென்ஸ்டாட் என்ற புகைப்படக்கலைஞர் எடுத்த இந்த புகைப்படம், லைஃப் இதழில் வெளியாகி பிரபலமானது. இரண்டாம் உலகப் போர் ஜப்பானின் சரணாகதியுடன் முடிவடைந்த நாளில், போர் நிறைவு கொண்டாட்டங்களின் போது ஐசென்ஸ்டெட் மாலுமி திடீரென ஒரு செவிலியரை முத்தமிடும் காட்சி இது.

21) கலைநயமிக்க பால்துளி( 1957):

ஹரோல்ட் எட்ஜெர்டன் 1957 இல் எடுத்த பால் துளி விழும் கலைநயமிக்க புகைப்படம் மிக மிக அழகானது. எட்ஜெர்டன் ஸ்டாப்-மோஷன் புகைப்படம் எடுத்தல் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கி அங்கீகாரம் பெற்றார். இந்த படம் மூலமாக குறைந்த வெளிச்சத்தில் படம்பிடிக்கக் கூடிய கேமராக்களுக்கு வழி வகுக்க உதவியது மற்றும் மனிதக் கண் உணரும் வகையில் மிக வேகமாக நகரும் காட்சிகளைப் பிடிக்க உதவியது.

22) புலம்பெயர்ந்த தாய் (1936):

அமெரிக்க மந்த நிலையின்போது டோரோதியா லாங்கே என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட ஏழு குழந்தைகளுடன் கவலை தோய்ந்த முகத்துடன் உள்ள புளோரன்ஸ் ஓவன்ஸ் தாம்சன் என்ற புலம்பெயர்ந்த தாயின் படம் நெகிழ்ச்சியை உருவாக்கியது.

23) றெக்கை கட்டிய விமானம்(1903): ரைட் சகோதரர்களின் முதல் விமானம் இது. விமானத்துடன் வில்பர் ஓடிக்கொண்டிருந்தார்; இந்த புகைப்படம் எடுக்கப்படவில்லை என்றால் அவர்களின் சாதனையை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

24) டேங்மேன்(1989):

பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மிக சவாலான எதிர்ப்பாளரான "டேங்க் மேனை" ஜெஃப் வைடர்  கைப்பற்றினார். இந்தப் படம் பனிப்போர் சகாப்தத்தின் முடிவையும், பொதுமக்களின் தைரியத்தையும் குறிக்கிறது. இந்த படம் ஜெஃப் வைடனரால் எடுக்கப்பட்டது.

25) ஈராக் வீரர்களை வதைத்த அமெரிக்க ராணுவம்(2004):

ஈராக் கைதிகளை அமெரிக்க வீரர்கள் சித்திரவதை செய்யும் இந்த படங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகு, அமெரிக்காவின் கபடத்தனம் உலகுக்கு தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com