இயல்பை விட வேகமாகச் சுழலும் பூமி.. ஜூலையில் நடக்கும் அதிசயம்..! 2029-ல் இது நடக்கலாம்!
செய்தியாளர் - வைஜெயந்தி.எஸ்
ஒன்பது கிரகங்களில் பூமி தனித்துவமான கிரகமாக பார்க்கப்படுகிறது.. காரணம் இங்குதான் மனிதர்கள் வாழ்கிறோம். கடிகாரத்தின் மூலமாக நேரத்தை கணக்கிடுகிறோம்.. அதுமட்டுமல்லாமல் பூமியின் சுழற்சி பகல் மற்றும் இரவை மாற்றி மாற்றி நமக்கு தருகிறது... இருப்பினும், தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது என்ன தெரியுமா? பூமி வேகமாக சுற்ற போகிறதாம்.. என்னது பூமி வேகமாக சுற்ற போகிறதானு ஆச்சரியமா இருக்கா? ஆம் வழக்கத்தை விட பூமி இப்போது வேகமாகச் சுழன்று வருகிறது என்றும் இதனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால், நமக்கும் இரவு பகல் மாறி மாறி வருகிறது.. பூமி தன்னை தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரமாகும். அதாவது அது ஒரு நாள் என கணக்கிடப்படுகிறது.... அதே போல் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆகும்.. இந்நிலையில் பூமியை பற்றி ஒரு ஆச்சர்யமான விஷயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.. ஆம்.. பூமி இப்போது இயல்பை விட வேகமாகச் சுழன்று வருகிறது. இதன் விளைவாக நாட்கள் சில மில்லி விநாடிகள் குறைகின்றன. இந்த இழப்புகள் சிறியதாகத் தோன்றினாலும், நம் நேர கட்டுப்பாட்டில் சில பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்..
பூமி எவ்வாறு சுழல்கிறது?
பூமி அதன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கிறது. இதனால் தான் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது போலவும், நட்சத்திரங்கள் வானத்தில் நகர்வது போலவும் தோன்றுகிறது. இந்தப் பூமியின் சுழற்சி காரணமாகவே இரவு மற்றும் பகல் உருவாகிறது. பூமியின் சுழற்சிக்கு பல காரணிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பூமியின் உருவாக்கம் மற்றும் ஈர்ப்பு விசைகள். பூமியின் சுழற்சி காரணமாக, சூரியன் உதிப்பதும் மறைவதும், பருவங்கள் மாறுவதும் நிகழ்கின்றன. பூமியின் சுழற்சியை நாம் ஏன் உணரவில்லை என்றால், பூமியின் காற்றும் அதே வேகத்தில் சுழல்வதாலும், ஈர்ப்பு விசையால் நாம் பூமியுடன் பிணைக்கப்பட்டுள்ளதாலும் நாம் அதை உணர முடிவதில்லை.
பூமி வேகமாக சுழல போகும் நாட்கள் எப்போது?
பூமியின் சுழற்சி வேகமாக இருக்கும் 3 குறிப்பிட்ட தேதிகளையும் விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்: ஜூலை 9, 2025; ஜூலை 22, 2025; ஆகஸ்ட் 5, 2025. இந்த நாட்களில் ஒரு நாள் 24 மணிநேரத்தை விட 1.51 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கலாம். மனிதர்களால் இந்த மாற்றத்தை உணர முடியாமல் போகலாம், ஆனால் அறிவியல் அடிப்படையில், இது மிகவும் முக்கியமானது.. காரணம் சந்திரன் பூமியின் பூமத்திய ரேகையிலிருந்து மிக தொலைவில் இருக்கும், அப்போது சந்திரன் துருவங்களுக்கு அருகில் வரும். அதனால் பூமியின் சுழற்சி வேகமடைந்து, நமது நாள் வழக்கத்தை விடக் குறைவாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு சந்திரனின் நிலை மற்றும் ஈர்ப்பு சக்தியே முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறுகின்றனர். அத்துடன் பருவங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள்தான் பூமியின் சுழலும் வேகத்தை மாற்றுகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால், இன்று ஒரு நாள் ( ஜீலை 9) சராசரியாக 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போது 6-ஆவது முறை என்று பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை மையம் குறிபிடுகிறது.
பூமியின் நாட்கள் குறைய காரணம் என்ன?
பூமியின் சுழற்சி வேகம் மாறுபடுவதால், ஒரு நாளின் நீளம் குறைகிறது அல்லது அதிகரிக்கிறது. தற்போது பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்ததால், ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தை விடக் குறைவாக இருக்கும். இது பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற காரணிகளால் ஏற்படுகிறது. பூமியின் குறைந்து வரும் சுழற்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்ள அணு கடிகாரங்களில் லீப் வினாடிகள் (Leap Second ) சேர்க்கப்படுகின்றன. பூமியின் இந்த வேகமான சுழற்சி நேரத்தின் பாதையில் தொடர்ந்து சுற்றி வருவதால் 2029 ஆம் ஆண்டளவில், முதல் முறையாக ஒரு லீப் வினாடியை நீக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
லீப் வினாடிகள் என்றால் என்ன?
லீப் வினாடிகள் என்பது, சாதாரண நிமிடமான 60 வினாடிகளுடன் ஒரு வினாடி கூடுதலோ குறைவோ சேர்க்கப்படும் ஒரு சிறு நேர திருத்தம் ஆகும். இதன் மூலம், பூமியின் உண்மையான சுழற்சி நேரம் மற்றும் ஆட்டொமேட்டிக் கிளாக் எனப்படும் அணுகடிகாரத்தின் நேரம் ஒத்திசைக்கப்படும். மொத்தமாக, பூமியின் சுழற்சி வேகம் இயற்கையான முறையில் மாறிக்கொண்டேதான் இருக்கும். இந்த மாற்றம் ஒரு விஞ்ஞானிகளுக்கு சற்று சவாலாக உள்ளது. நாம் நிலையானது என்று கருதும் நேரம் கூட இயற்கையின் பல காரணிகளால் மாறிவரும் என்பதை இது உணர்த்துகிறது.. பூமி தொடர்ந்து வேகமாக சுழன்றால், வரலாற்றில் முதல் முறையாக அணு நேரத்திலிருந்து ஒரு லீப் வினாடியை நீக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2020 முதல், பூமி சற்று வேகமாக சுழன்று வருவது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வாஷிங்டன், டி.சி.யில் உள்ள சர்வதேச பூமி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்புகள் சேவை (International Earth Rotation and Reference Systems Service) இந்த மாற்றம் சீராக இருப்பதாகவும், இதன் விளைவாக நாட்கள் சில மில்லி விநாடிகள் மட்டுமே குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது நடந்தால், 2029 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த யுனிவர்சல் டைம் (UTC) இலிருந்து ஒரு லீப் வினாடியை நீக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.