வானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. சுற்றுலாப் பயணிகளை அதிரவைத்த விபத்து!
செய்தியாளர் - M.மீரா
நேபாளத்தில் தரையிறங்க முயன்றபோது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து குடிமகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருக்கும் பெரிச்சே ஹெலிபேடில் செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காத்மாண்டுவில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது.
Fishtail Air மற்றும் Dynasty Air நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையிறங்க முயன்றபோது, அவற்றின் சுழலும் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதில் இரண்டு ஹெலிகாப்டர்களும் மிக நெருக்கமாக வந்து மோதுவது பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் ஹெலிகாப்டர் மூலம் லுக்லா பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த ஷைலேஷ் படேல் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

