அக்.13 வரை கனமழை! தடுப்பு சுவரையே தாண்டும் வெள்ளம்? இடைவிடாமல் தாக்கும் இயற்கை!
தாய்லாந்தில் அக்டோபர் 10 முதல் 13 வரை கனமழை தொடரும் என JICC அறிவிப்பு. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாங் பாக்கொங் நதியின் தடுப்பு சுவரை தாண்டும் வெள்ள அபாயம் உள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகம். அணைகள் நிரம்பிய நிலையில், அரசு தீவிர கண்காணிப்பில் உள்ளது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
இந்தியாவை போல, தாய்லாந்து நாட்டிலும் தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு பருவமழை காலம் தான் இருக்கின்றன. தற்போது தென்மேற்கு பருவமழையின் இறுதிக்கட்டத்தால், அந்த நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, தாய்லாந்து நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்கள், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இப்படியான நிலையில், அந்நாட்டின் வானிலை ஆய்வு அமைப்புகள், தற்போது புதிய பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளன. அதாவது, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் பாதிப்புகளை கண்காணிக்க, அந்நாட்டு அரசாங்கத்தால் JICC என்ற கூட்டுத் தகவல் தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, JICC புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 10 முதல் 13 -ஆம் தேதி வரை, நாடு முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் வானிலை மற்றும் நீர்மட்டத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் அறிவுறுத்திய JICC, கிழக்குப் மாகாணங்களில் பாங் பாக்கொங் நதியின் வெள்ளத் தடுப்புச் சுவர்களை தாண்டி வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து, மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்கள் நிலச்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் மழை சற்று குறைந்து, பின்னர் அக்டோபர் 10, 13 தேதிகளில் மீண்டும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, சாவோ ஃபிரயா, பாசத் ஜோலாசித் உள்ளிட்ட அணைகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, வஜிரலாங்க்கோர்ன் அணை 98% வரையிலும், ஸ்ரீநகரின் அணை 90% வரையிலும் நிரம்பியுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

