பிணைக்கைதிகளின் காணொளி; இஸ்ரேலிய பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கிறதா ஹமாஸ்?

பிணைக்கைதிகளாக உள்ளவர்களை, இஸ்ரேலிய சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்கப் பயன்படுத்துவோம் என ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மெஷல்(KHALED MESHAAL) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்திய போது பிடித்து வரப்பட்ட பிணைக்கைதி தோன்றும் காணொளியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. காஸாவில் பிணைக்கைதிகளாக 199 பேர் வரை வைக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் பிடியில் 250 பேர் வரை இருப்பதாகவும் அவர்களில் ராணுவ அதிகாரிகளும் அடங்குவர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பிணைக்கைதியாக பிடித்த வரப்பட்ட பெண் ஒருவர் தோன்றும் காணொளியையும் ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

காணொளியில் பேசும் அந்தப் பெண் தனது பெயர் மாயா ஷெம்(MAYA SHEM) என்றும் 21 வயது நிரம்பியவர் என்றும் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஷோஹாம் (SHOHAM)பகுதியைச் சேர்ந்த அவர் ஒரு நிகழ்வில் பங்கேற்றிருந்த தான் பிடித்து வரப்பட்டதாகவும், தன்னை விடுவிக்க வேண்டும் என கெஞ்சுவதும் அதில் பதிவாகி உள்ளது. மேலும், அதே பெண் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதும் காணொளியில் உள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் மாயா கடத்தப்பட்டதை உறுதி செய்துள்ளதோடு, அவரது குடும்பத்தினரோடு பேசிவருவதாகவும் கூறியுள்ளது. இதனிடையே பிணைக்கைதிகளாக உள்ளவர்களை, இஸ்ரேலிய சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்கப் பயன்படுத்துவோம் என ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மெஷல்(KHALED MESHAAL) தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com