
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 8வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். எனினும் அங்கு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலுக்கு பதிலடி தரும் விதமாக, ஹமாஸும் நேற்று 150 ராக்கெட்களை ஏவியதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே காசா பகுதியில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் 24 மணிநேரத்தில் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கெடு, இன்று மாலைக்குள் முடிவடைய இருக்கிறது. இதனால், அங்கு தரைவழி தாக்குதல் தொடங்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: காஸாவில் குளியல், கழிப்பறைகளைச் சுட்டுத் தள்ளிய ஹமாஸ் அமைப்பினர்.. வைரல் வீடியோ
இந்த நிலையில், ஹமாஸின் விமானப்படைத் தலைவர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. நேற்றிரவு ஹமாஸ் படையின் தலைமை அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அந்த தாக்குதலில் ஹமாஸ் குழுவின் விமானப் படைத் தலைவர் முராத் அபு முராத், கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முராத் முக்கிய காரணம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. கொல்லப்பட்டதாக கூறப்படும் முராத் அபு முராத், காஸா நகரில் இஸ்லாமியக் குழுவின் வான்வழி நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் அமைப்பின் மூத்த ராணுவத் தளபதி எனக் கூறப்படுகிறது.