ரூ.65 லட்சம் கோடி.. ஈரான் போரால் நிலைகுலைந்த வளைகுடா நாடுகள்!!
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரின் தாக்கம் வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், எண்ணெய் மற்றும் எரிசக்தி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போரால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்துக்கு 2030-ம் ஆண்டு வரை சுமார் 790 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.65 லட்சம் கோடி) இழப்பு ஏற்படலாம் என Allianz Research நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதுதவிர, எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு 200 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
Allianz Research அறிக்கையின்படி, 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (GCC states - Gulf Cooperation Council ) உள்ள நாடுகள் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 790 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்தி இழப்பைச் சந்திக்கலாம். மேலும், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், சுத்திகரிப்பு ஆலைகள், குழாய்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட எரிசக்தி மையங்கள் தாக்கப்பட்டதால் 200 பில்லியன் டாலர் அளவுக்கு நேரடி சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டுவாரியான பொருளாதாரப் பாதிப்பைப் பொறுத்தவரை, கத்தாரின் பொருளாதாரம் 14 சதவீதமும், குவைத்தின் பொருளாதாரம் 11 சதவீதமும், பஹ்ரைனின் பொருளாதாரம் 8 சதவீதமும் சுருங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் 2.8 சதவீதமும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 0.9 சதவீதமும் சரிவு ஏற்படலாம். ஓமன் நாட்டின் பொருளாதாரம் மட்டும் 3.3 சதவீதம் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஈரான் போருக்காக அமெரிக்கா இதுவரை சுமார் 48.3 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பென்டகனை வலியுறுத்தி வருகின்றனர்.
ஈரான் போர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அரசியல் விவாதங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இதன் பொருளாதாரச் சுமை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

