\
Iran's new missile city what makes it special
Missile Reuters

அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், புதிய ரகசிய ஏவுகணை நகரத்தை வெளியிட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகும் தங்களிடம் வலுவான ராணுவக் கட்டமைப்பு இருப்பதை வெளிப்படுத்தும் வகையில், ஈரான் புதிய ஏவுகணை ஏவுதளத்தையும், நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய ஏவுகணை நகரத்தையும் உலக நாடுகளுக்குக் காட்டியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமைத் தளபதி அகமது வாஹிதி, அண்மையில் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணைத் தளத்தைப் பார்வையிட்டார். அப்போது, ஒரே நேரத்தில் இரண்டு ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட புதிய ஏவுதளம் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

missile city
missile cityReuters

இந்தப் புதிய ஏவுதளம், திரவ எரிபொருளில் இயங்கும் இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த காணொளியை ஈரான் அரசு ஊடகமான IRIB வெளியிட்டுள்ளது.

திரவ எரிபொருள் ஏவுகணைகளைச் செங்குத்தாக ஏவ முடியும். மேலும், அவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வசதி இருப்பதால், எதிரிகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டிச் சென்று தாக்குதல் நடத்த உதவும் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

missile city
missile city reuters

மேலும், ஈரானின் புதிய தலைமுறை ஏவுகணைகளின் தாக்குதல் தூரம், துல்லியம் மற்றும் வழிகாட்டும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைச் சாராமல் இயங்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் மலைகளுக்கு அடியிலும் நிலத்துக்கு உள்ளேயும் ரகசியமாக ஏவுகணைத் தளங்களை அமைத்து வருகிறது. இந்த நிலத்தடி வளாகங்களில் ஏவுகணைகள், ட்ரோன்கள், ஏவுதளங்கள் மட்டுமின்றி, ஆயுத உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களும் சேமித்து வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி புதிய நிலத்தடி ராணுவ வளாகம் குறித்து ஈரான் அறிவித்திருந்தது. ஏற்கனவே செயல்பட்டு வந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்திக் கூடங்களையும் நிலத்தடிக்கு மாற்றியுள்ளதாக அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்ட காணொளியில் பல கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கங்களும், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்தக் காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், தங்களிடம் போதுமான ஏவுகணைகளும் ஆயுதங்களும் இருப்பதாகக் காட்டி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுப்பதே ஈரானின் நோக்கம் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Iran's new missile city what makes it special
இஸ்ரேல்| பேச்சுவார்த்தை தோல்வி.. ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி!