“2020-லேயே திட்டமிட்டோம்; இப்போதான் சாத்தியமானது!” ஜி.யூ.போப்க்கு சிலை நிறுவும் கனடிய தமிழர் பேரவை

ஜியூ போப் பிறந்து 200 ஆண்டுகள் கடந்த நிலையில் அவருக்கு கனடாவில் கனடிய தமிழர் பேரவை சிலை நிறுவியுள்ளது.
ஜி.யூ.போப் சிலை
ஜி.யூ.போப் சிலைgupopemonumentcanada.com

கனடா நாட்டில் உள்ள பிரின்ஸ் எட்வர்டு தீவில் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி பிறந்தவர் ஜார்ஜ் உக்லா போப். ஜோன் போப் மற்றும் கேதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு மகனாக பிறந்த இவர், குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர். அங்கு அவர் ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பெற்றார்.

G U POPE
G U POPE

1839 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த ஜியு போப் தனது கப்பல் பயணத்தின்போது தமிழை பயின்றுள்ளார். பின் தூத்துக்குடியில் ஆரியங்காவுப் பிள்ளை மற்றும் இராமானுசக் கவிராயரிடமும் இலக்கண இலக்கியங்களை கற்றுக்கொண்டார். மீண்டும் 1850களில் இங்கிலாந்து சென்ற போப், அங்கு திருமணம் செய்து கொண்டு மீண்டும் தமிழகம் வந்தார். தஞ்சாவூரில் தங்கிய அவர் புறநானூறு, திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்று அது குறித்து ஆய்வினையும் செய்துள்ளார். மேலும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இப்படி பெரும் சிறப்புகளைக் கொண்ட ஜி.யூ.போப், பிறந்து 200 ஆண்டுகள் (2020 ஆம் ஆண்டுடன்) நிறைவானதை முன்னிட்டு கனடிய தமிழர் பேரவையினர் சிலை நிறுவியுள்ளர். அச்சிலையை அவர்கள், நாளை (ஜூலை 15) திறக்க இருக்கின்றனர்.

இது குறித்து கனடியத் தமிழர் பேரவை, ஜி.யூ.போப் விழாக்குழு தலைவர் சிவன் இவங்கோவை நாம் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “கனடாவில் பிரின்ஸ் எட்வர்டு தீவில் பிறந்த ஜி.யூ.போப் திருக்குறள், திருவாசகம் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையில் நடந்த போராட்டங்களால் 1980 மற்றும் 1990 களில் தமிழ் மக்கள் அதிகளவில் கனடாவிற்கு இடம் பெயர்ந்தனர்.

கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பெருவாரியாகவும் வேகமாகவும் வளர்ச்சி அடைந்தனர். வெற்றிகரமான சமூகமாக தமிழ்ச்சமூகம் நிலவுகிறது. இந்நிலையில் கனடாவில் பிறந்து தமிழுக்கு அரும்பணி ஆற்றியவருக்கு திரு உருவச்சிலை வைக்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

சிவன் இவங்கோ
சிவன் இவங்கோ

2020 ஆம் ஆண்டே இதற்காக திட்டமிட்டோம். கொரோனா வந்ததால் தடை ஏற்பட்டது. இப்போது அது முடிவடைந்துள்ளது. இது குறித்து மாகாண அரசிடம் பேசியபோது அரசு நிலத்தை கொடுக்க முன்வந்தது. அந்த நிலத்தில் திரு உருவச்சிலை நிறுவப்பட்டு நாளை (15/07/2023) அது திறக்கப்பட இருக்கிறது. சிலை நிறுவ ஆகும் பொருட்செலவை கருத்தில் கொண்டு இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதில் திரட்டப்பட்ட நிதி, மக்களின் நன்கொடை ஆகியவற்றைக் கொண்டு சிலை நிறுவப்பட்டுள்ளது” என்றார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஜி யூ போப் குறித்து அரச பதவியில் இருப்பவர்கள் கூறிய கருத்து குறித்தும் கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு பதில் அளித்த அவர், “கனடாவில் உள்ள தமிழ் மக்களும் சரி, உலகம் முழுதும் உள்ள தமிழ் மக்களும் சரி ஜியூ போப் குறித்து வரும் எதிர்மறையான விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை.

கிறிஸ்துவராக இருந்த போதும் ஜியூ போப் திருவாசகத்தை மொழி பெயர்த்துள்ளார். அது தான் முக்கியமானது. எங்கள் முயற்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிலை திறப்பு விழாவில் அதை வெளியிடுவோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com