எரிபொருள் பற்றாக்குறை | விமானங்களுக்குப் பாதிப்பு.. ஐரோப்பாவுக்கு பெரிய சிக்கல்!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்போது இரண்டு கால வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுத்தவதற்கு இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் போர்ப் பதற்றத்தால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பாதை வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தியாவின் 60% எரிவாயு (LPG) தேவை இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது. போரின்போது, இவ்வழியாக எதிரிநாட்டுக் கப்பல்கள் சென்றால் தாக்கம் என ஈரான் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு அமெரிக்க கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ளது. இது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கோடைக்காலங்களில் விமானப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. போர் தொடரும் பட்சத்திலும், எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்கள் மத்திய கிழக்கு வழியாக தடையின்றிச் செல்லாமலும் இருந்தால், விமானங்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை ஐரோப்பாவில் விரைவில் ஏற்படக்கூடும். விமானப் போக்குவரத்து, அதன் கோடைக்கால பயணத்திற்குத் தயாராகி வரும் நிலையில், ஐரோப்பாவிடம் வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் உள்ளது என்று சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் எச்சரித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, ஐரோப்பா மற்ற போக்குவரத்து எரிபொருட்களைவிட ஜெட் எரிபொருள் இறக்குமதியையே அதிகம் சார்ந்துள்ளது; இதில் சுமார் 75% மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கொண்டு செல்லப்படும் ஜெட் எரிபொருளின் மிகப்பெரிய நுகர்வோராக ஐரோப்பா தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அது, ஐரோப்பாவின் விமானப் பயணங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, ஐரோப்பிய விமான நிறுவனமான ரயன்ஏர், தங்களது விநியோகஸ்தர்களால் மே மாதத்தின் பெரும்பகுதி வரை மட்டுமே போதுமான ஜெட் எரிபொருளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். கப்பல்கள் விரைவில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லத் தொடங்கவில்லை என்றால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று அந்த விமான நிறுவனம் எச்சரித்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள விமான நிறுவனங்களுக்கு கோடைக்காலம்தான் உச்சபட்ச மற்றும் அதிக லாபம் தரும் பருவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

