”அது பாசத்தின் வெளிப்பாடு..” விமானத்தில் ‘அறை’ விழுந்த விவகாரம் |பிரான்ஸ் அதிபர் கொடுத்த விளக்கம்
பிரான்ஸ் நாட்டு அதிபராக இருப்பவர் இம்மானுவேல் மேக்ரான். அவர், சமீபத்தில் தன் மனைவி பிரிஜிட்டுடன் வியட்நாமுக்குச் சென்றிருந்தார். அப்போது விமானத்தில் மேக்ரானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே சண்டை நடந்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக, செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், விமானக் கதவு திறக்கப்பட்டதும் வாசலுக்கு நேராக நின்று கொண்டிருந்த மேக்ரான் முகத்தில் சிவப்பு நிற உடையணிந்த ஒரு நபரின் கைகள் அடித்து தாக்குவது பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மேக்ரானுடன் கீழே இறங்கி வந்த அவரது மனைவி பிரிஜெட், சிவப்பு நிற கோட் அணிந்திருந்ததால், மேக்ரானை அவரது மனைவியே அடித்திருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது. மேலும், மேக்ரான் விமானத்தில் இருந்து இறங்கியபோது தன் மனைவியின் கைகளை கோர்க்க முயன்றும் இறுக்கமான முகத்துடன் பிரிஜிட் தனியாக இறங்கினார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை நிகழ்ந்திருக்கலாம் என ஊகங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இதுகுறித்து அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி அரண்மனை விளக்கமளித்துள்ளது. ”விமானத்தில் நடந்தது அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும் அவரது மனைவி பிரிஜிட்டிற்கும் இடையிலான பாசத்தின் வெளிப்பாடே தவிர, அது ஒரு வாக்குவாதம் அல்ல” என்று விளக்கமளித்துள்ளது.
அதுபோல் மேக்ரான், “எனக்கும் எனது மனைவிக்கும் இடையே எவ்வித சண்டையும் நடக்கவில்லை. அந்த வீடியோவில் இருப்பதைப்போல என்னை யாரும் அடிக்கவில்லை. காணொளியில் உள்ள காட்சிகள் போலியானவை அல்ல. ஆனால் தவறான அர்த்தத்தில் பரப்பப்படுகிறது” எனப் பதிலளித்துள்ளார்.