நிதி முறைகேடு குற்றச்சாட்டு.. பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுச் சிறை!
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறைவாசத்தைத் தொடங்கி உள்ளார். இதன்மூலம், சிறைவாசம் அனுபவிக்கப்போகும் முதல் பிரான்ஸ் அதிபர் சர்கோஸி ஆவார்.
2007 தேர்தல் பிரசாரத்திற்கு, மறைந்த லிபிய ஆட்சியாளர் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாகப் பெற்றதற்காக, சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்நிலையில் அவரது சிறைத்தண்டனை காலம் இன்றுமுதல் தொடங்கி உள்ளது. இதன்மூலம், சிறைவாசம் அனுபவிக்கப்போகும் முதல் பிரான்ஸ் அதிபர் சர்கோஸி ஆவார். முன்னாள் அதிபர் என்பதால் பாதுகாப்பு கருதி சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சிறைச்சாலையின் தனிமைச் சிறைப் பிரிவில் ஒன்பது சதுர மீட்டர் (95 சதுர அடி) அறையில் அவர் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனிமைச் சிறையில், கைதிகள் தங்கள் அறைகளில் இருந்து வெளியே வந்து, ஒருநாளைக்கு ஒரு முறை, ஒரு சிறிய முற்றத்தில் தனியாக நடக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி, சர்கோஸியும் வாரத்திற்கு மூன்று முறை பார்வையிட அனுமதிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, அவரது சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் எத்தனை காலத்திற்கு சிறை வாசம் அனுபவிப்பார் எனத் தெரியவில்லை. இருந்தாலும், அந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் எனச் சொல்லப்படுகிறது. சிறைக்குச் செல்லும் முன் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தவாறே சென்ற சர்கோஸி, தான் நிரபராதி என்பதை மீண்டும் வலியுறுத்தினார். அப்போது செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர், ”இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும், ஓர் அப்பாவி மனிதன் சிறைத்தண்டனை அனுபவித்து, பழிவாங்குவதற்காக தப்பிச் செல்வதைக் குறிக்கும் ’தி கவுண்ட் ஆஃப் மான்டே கிறிஸ்டோ’ நாவலின் பிரதியையும் எடுத்துச் செல்கிறேன்” எனத் தெரிவித்தார்.