கொலம்பியா | அதிபர் வேட்பாளர் துப்பாக்கிச் சூடு.. 15 வயது சிறுவன் கைது!
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள கொலம்பியாவில், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு இப்போது முதலே பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், கொலம்பிய செனட்டரும் 2026 அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (39), துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தார். ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த மிகுவல் யூரிப், தலைநகர் போகோடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வின்போது, நேற்று பொது பூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் பின்னால் இருந்து அவரைச் சுட்டனர். சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதில் அவரது கழுத்திலோ, தலையிலோ தோட்டா தாக்கியதாகவும், தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். தாக்குதலில் வேறு எவரும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொலம்பிய அதிபர் அலுவலகம் இந்த வன்முறைத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருப்பதுடன், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்து காரணமாக பிரான்ஸுக்குச் செல்லத் திட்டமிருந்த கொலம்பிய அதிபர் பெட்ரோ, தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.