நெருங்கி வந்த இரு விமானங்கள்! நேருக்கு நேர் மோதும் அபாயம்! நூலிழையில் தப்பிய பல உயிர்கள்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
அமெரிக்காவின் அரிசோணா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸ் நகரில், ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த விமான நிலையத்தில், தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் புறப்பட்டும், தரையிறங்கியும் வருகின்றன.
இதில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் ஜெட் விமானம், தினமும் சிகாகோவில் இருந்து ஃபீனிக்ஸ் நகருக்கும், ஃபீனிக்ஸ் நகரில் இருந்து சிகாகோவுக்கும் செல்வது வழக்கம். மேலும், சிகாகோவிலிருந்து ஃபீனிக்ஸ் வந்துசெல்லும் இந்த ரவுண்ட்-ட்ரிப் விமானங்களுக்கு ஒரே விமான எண் தான் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், சிகாகோவில் இருந்து கிளம்பிய விமானம், மோசமான வானிலை காரணமாக 90 நிமிடங்கள் தாமதமாக வந்தது. இதனால் பயணிகளை அனுப்ப, ஃபீனிக்ஸில் இருந்த மற்றொரு மாற்று விமானத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாகப் பயன்படுத்தியது.
இதற்கிடையே, சில குளறுபடிகளால் இரு விமானங்களுக்கும் ஒரே விமான எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாமதமாக வந்த விமானமும், புதிதாகப் புறப்பட்ட விமானமும் ஒரே நேரத்தில் வான்வெளியில் சந்தித்துக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.
மேலும், இரு விமானங்களுக்கும் ஒரே எண் வழங்கியிருப்பதால், விமான கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தல்கள் தங்களுக்கானது என்று, இருவரும் புரிந்துக் கொள்ளும் சூழலும் உருவாகியதால், பெரும் விபத்துக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இதனை நொடிப் பொழுதில் அறிந்த விமான கட்டுப்பாட்டு அதிகாரி, இரு விமானிகளுக்கும், சரியான குறிப்புகளை வழங்கி, விபத்தை தவிர்த்தார்.
அதாவது, இரு விமானங்களின் எண்ணுடன் சேர்த்து, தரையிறங்கும் விமானமா? புறப்படும் விமானமா? என்ற தகவல்களையும் சேர்த்து கூறினார். இதனால், இரு விமானிகளும் உஷாராகி, குறிப்புகளை சரியாக புரிந்துக் கொண்டனர். புறப்படும் விமானத்தை அதிக உயரத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும், தரையிறங்கும் விமானத்தை அதற்கு மேலேயும் பாதுகாப்பான இடைவெளியில் இயக்கினார்.
இரண்டு விமானங்களின் பைலட்டுகளும் ஒருவரையொருவர் தூரத்திலிருந்தே பார்த்துக்கொள்ளும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்கினார். விமானங்கள் பாதுகாப்பாகக் கடந்த சென்றதும், தரையிறங்கிய விமானத்தின் பைலட் கட்டுப்பாட்டு அதிகாரியின் திறமையான செயலை வெகுவாகப் பாராட்டினார்.
இதனால், பெரும் அசம்பாவிதம் நிறுத்தப்பட்டு, பல உயிர்கள் காக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து நிர்வாகம், தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

