\
7.7 magnitude earthquake hits indonesia
EarthquakeANI

இரண்டாக பிளந்த நிலம்! மிரட்டிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை! இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர் - கார்த்திகேயன்

கடந்த 2004-ஆம் ஆண்டு அன்று, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உட்பட பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். இந்த இயற்கை சீற்றத்தால், உலகம் முழுவதும் கிட்டதட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் அருகில் உள்ள ஆழ்கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் தான், இவ்வளவு பெரிய சுனாமி ஏற்படுவதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 22 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்தோனேசியாவின் புளோரஸ் தீவின் வடக்குக் கடற்கரை பகுதியில், 7.7 ரிக்டர் என்ற அளவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலத்துக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதையடுத்து, புளோரஸ் தீவின் கடற்கரையோரமாக உள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டனர்.

கிழக்கு நுசா டெங்காரா, தெற்கு சுலாவெசி மற்றும் மேற்கு நுசா டெங்காரா ஆகிய பகுதிகளில் 0.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் சுனாமி ஆபத்து நீங்கியதாக அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

கடந்த 2004-ஆம் ஆண்டு, இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டபோது, இந்தியாவிலும் மிகப்பெரிய பாதிப்பு நிகழ்ந்தது. இரு நாடுகளின் புவியியல் அமைவிடமும், இந்திய பெருங்கடலின் எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால், இத்தகைய பாதிப்பு நடந்ததாக கூறப்பட்டது.

எனவே, அதேபோல், இந்த முறையும் நடந்துவிடுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் இருந்த நிலையில், அதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழும் "பசிபிக் நெருப்பு வளையம்" பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால், அந்நாடு எப்போதும் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

7.7 magnitude earthquake hits indonesia
சுதந்திரத்துக்கு ஆக. 15 தேர்வு செய்யப்பட்டது ஏன்? ஒரு நபர் எடுத்த முடிவு: வரலாற்று பின்னணி என்ன ?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com