”காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூட்டாது” - இஸ்ரேல் Ex உறுப்பினரின் கொடூரமான கருத்து!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7, 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன.
தொடர்ந்து 2வது முறையாக போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமல்படுத்தப் படாததால், மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது. மேலும், காஸாவை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும், தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் இஸ்ரேல் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதை நிறுத்துமாறு இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதை இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், ”காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான்” என்று முன்னாள் இஸ்ரேலிய சட்டமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்திருப்பது உலக நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மோஷே ஃபீக்லின், “நமது எதிரி ஹமாஸ் அல்ல. ஹமாஸின் இராணுவப் பிரிவும் அல்ல. காஸாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நமக்கு எதிரிதான். காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது. நாம் காஸாவை ஆக்கிரமித்து, அங்கு குடியேற வேண்டும். இதனைத் தவிர, வெற்றி என்று வேறெதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மோஷேவின் இந்தக் கருத்தானது, பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ”இஸ்ரேல் குழந்தைகளை ஒரு பொழுதுபோக்காகக் கொல்கிறது" என்று ஓய்வுபெற்ற IDF துணைத் தலைவர் யெய்ர் கோலன் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, ஒவ்வொரு காஸா குழந்தையும் எதிரி என்ற ஃபீக்லினின் கருத்துகள் வந்துள்ளன.
“நாம் ஒரு நல்ல மனநிலை கொண்ட நாடாக மீண்டும் செயல்படாவிட்டால், தென்னாப்பிரிக்காவைப்போல இஸ்ரேல் ஒரு தீய நாடாக மாறும் பாதையில் உள்ளது. நல்ல மனநிலை கொண்ட நாடு பொதுமக்களுக்கு எதிராகப் போராடாது. குழந்தைகளை ஒரு பொழுதுபோக்காகக் கொல்லாது, பெருமளவிலான மக்கள்தொகை இடப்பெயர்ச்சியில் ஈடுபடாது" என்று கோலன் கூறியிருந்தார். ஆனால், கோலனின் இந்தக் கூற்றை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்திருந்தார்.
ஏப்ரல் 2025இல் பாலஸ்தீன கல்வி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் 2023இல் போர் தொடங்கியதிலிருந்து காஸா பகுதியில் 17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். "காசாவில் 17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தியாகிகளாகக் கொல்லப்பட்டுள்ளனர். இது குழந்தைகள் தாங்கிக் கொண்டிருக்கும் துயரத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் ஓர் எண்ணிக்கை. ஒவ்வோர் எண்ணிக்கையும் ஒரு வாழ்க்கை, நினைவுகள் மற்றும் இழந்த அனுபவங்களைக் குறிக்கிறது" என்று அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளதால், போரினால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியில் சுமார் 14,000 குழந்தைகள் கொல்லப்படலாம் என்று ஐ.நா சமீபத்தில் எச்சரித்திருந்தது.