ஐரோப்பாவை மிஞ்சும் இந்தியா! EU-வில் கடும் நெருக்கடி! தொழில்துறைக்கு வரும் ஆபத்து?
செய்தியாளர் - கார்த்திகேயன்
வாகனத் தயாரிப்பு, கட்டுமானம், மின்சாரம், பேக்கேஜிங், இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி கருவிகள் போன்ற துறைகளுக்கு, அலுமினியத்தின் தேவை என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. குறிப்பாக, கார்கள், ரயில்கள், பேருந்துகள் போன்ற வாகனங்களின் எடையை குறைக்க உதவும் அலுமினியத்தால், எரிபொருள் சிக்கனம், கார்பன் உமிழ்வு குறைதல் ஆகிய பலன்களும் கிடைக்கின்றன. மின்சார வாகனங்களில் பேட்டரி எடையை சமன் செய்யவும், இது பெருமளவில் பயன்படுகிறது. இந்த அலுமினியத்தை, மூலப்பொருட்களின் மூலம் தயாரிப்பதை விட, மறுசுழற்சி மூலம் பெற 95 சதவீதம் குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.
இதனால், வெளிநாடுகளில் இருந்து அலுமினிய கழிவுகளை பெருமளவில் இறக்குமதி செய்து, மறுசுழற்சி செய்யும் முயற்சியில் இந்தியாவும், சீனாவும் ஈடுபடுகிறது. உள்நாட்டில் அலுமினியக் கழிவுகளுக்கான தேவை மிக அதிகமாக இருப்பதால், இந்தியாவும், சீனாவும் இப்படியான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நன்கு வளர்ச்சி அடைந்த ஐரோப்பாவில், சொந்த அலுமினியத்திற்கே தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
அதாவது, ஆண்டுதோறும் 12 லட்சம் டன் மறுசுழற்சி அலுமினிய கழிவுகள் ஐரோப்பாவில் இருந்து வெளியேறுகின்றன. மறுசுழற்சிக்கு குறைவான ஆற்றலே தேவைப்படும் சூழலிலும் இது நடைபெறுகிறது. ஜெர்மனியில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆலையில், ஆண்டுக்கு 4 லட்சம் டன் அளவில் மிகப்பெரிய அலுமினிய கழிவுகள் உருவாக்கப்படுகிறது. இருப்பினும், ஐரோப்பாவின் அலுமினிய துறை மிகப்பெரிய நெருக்கடியில் தான் உள்ளது. பிற பகுதிகளை விட, மின்கட்டணமும் எரிவாயு விலையும் அதிகமாக இருப்பது, தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக, அந்நாட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம், மலிவான மின்சாரம், குறைவான உற்பத்தி செலவு, தளர்வான சுற்றுச்சூழல் விதிகள் உள்ள பிற நாடுகளுக்கு, இந்த மதிப்புமிக்க கழிவுகள் செல்கின்றன.
சீனா, இந்தியாவில் உள்ளதை போல, அலுமினிய கழிவுகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று, உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக அளவில் அலுமினிய கழிவுகளை இழப்பது, ஐரோப்பாவின் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை சுதந்திரத்தை பறித்துவிடும் என்று உற்பத்தியாளர்கள் எச்சரிக்கின்றனர். உலக அளவில் வளர்ந்த கண்டமாக உள்ள ஐரோப்பாவே, இந்தியா, சீனா மாதிரியான ஆசிய நாடுகளிடம் பாடம் கற்கும் நிலை ஏற்பட்டிருப்பது, மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
