கலிபோர்னியாவில் சாதிய பாகுபாட்டிற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்.. சட்டமாகுமா? பின்னணி என்ன?

இந்தியர்கள் வேறு நாடுகளுக்கு எங்கெல்லாம் சென்று வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சிலர் சாதியை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் தான் சாதியப் பாகுபாடுகள் கூடாது என்றால் அங்குள்ள இந்து அமைப்புகள் இதை கறுப்பு நாள் என்கின்றனர்.
எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்pt web

சாதிய பாகுபாட்டுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சாதிரீதியிலான ஒடுக்குமுறைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். தமிழகத்தில் நாங்குநேரி மாணவர் பாதிக்கப்பட்டார் என்றால், உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் பாதிக்கப்பட்டார். பல இடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் சாதிரீதியாகவும் மத ரீதியாகவும் இன்னும் பல்வேறு முறைகளில் பலரும் துன்புறுத்தப்பட்டு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில்கூட தமிழகத்தில் இரட்டைக் குவளை முறை, கோயிலுக்கு நுழைய முடியாமை உள்ளிட்ட கொடுமையான விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அதிலும் கொடுமையானது வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்னை. தமிழ்நாட்டில் இப்படி என்றால், உலகத்தில் இன்னும் இனமோதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் சுட்டு வீழ்த்தப்படுவதும் அதற்கு உதாரணமாய்ச் சொல்லலாம்.

இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கலிபோர்னிய சட்டமன்றத்தில் பலகட்ட நடவடிக்கைக்கு பிறகு, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என கட்சி கடந்து, இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதிப் பாகுபாட்டை எதிர்த்து, மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்தச் சட்ட மசோதா உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அம்மாநில கவர்னர் கவின் நியூசோமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக்கப்படும். இது சட்டமாகும் பட்சத்தில், சாதிய பாகுபாட்டுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றும் முதல் மாகாணம் என்ற பெறுமையை கலிபோர்னியா பெறும்.

மாநில செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப் என்பவரால் இந்த மசோதா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்.பி.403 சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த வஹாப், நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றார். இதற்கு, நாடு முழுவதும் உள்ள சாதி சமத்துவ சிவில் உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வடஅமெரிக்க இந்துக்கள் கூட்டமைப்பு (CoHNA), ’கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்’ என மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளும் இந்த வேளையில், இப்படியான ஒரு மசோதா நிறைவேற்றத்திற்கு பலரும் வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து பேசுவதற்காக எவிடென்ஸ் கதிரை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “கலிபோர்னியாவில் சாதிரீதியிலான பாகுபாடு கூடாது என மசோதா கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்து நாடுகளிலும் அதைச் செய்ய வேண்டும். இனப்பாகுபாடு பேசுவது போல் தான் சாதியப் பாகுபாடும் கொடுமையானது. வெவ்வேறு இனக்குழுக்கள் இவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள். பிறப்பு, இனம், மதம், தொழில் என ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்படும் நிலை உலகம் முழுவதிலும் பல நாடுகளில் உள்ளது.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்pt web

இந்தியாவிலும் 1955 ஆம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார்கள். சாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்காக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989களில் கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவில் தான் சாதிய அமைப்புகள் மிக வலுவாக உள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற இடங்களிலும் சாதிய அமைப்புகள் உள்ளது. இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சாதிய அமைப்புகள் இருக்கும்.

இந்தியர்கள் வேறு நாடுகளுக்கு எங்கெல்லாம் சென்று வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சிலர் சாதியை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் தான் சாதியப் பாகுபாடுகள் கூடாது என்றால் அங்குள்ள இந்து அமைப்புகள் இதை கறுப்பு நாள் என்கின்றனர். இங்கிருந்து சென்று வேறு நாடுகளில் இருந்து கொண்டு அவர்கள் போடும் சட்டத்திற்கு எதிராக இவர்கள் பேசுகிறார்கள்.

சாதியப்பாகுபாடு கூடாது என்றால் சர்வதேச அளவில் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவார்கள். அப்போது மற்றவர்கள் அனைவரும் உள்ளே வருவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே இதை கறுப்பு நாள் என்கின்றனர். சாதியப்பாகுபாடு கூடாது என்பது தான் இந்தியாவில் உள்ளது. அது எப்படி கறுப்பு நாளாகும்.

அனைத்து வகையான இனப்பாகுபாட்டுக்கு எதிரான உடன்படிக்கை என ஐநாசபை ஏற்கனவே ஒரு சாசனத்தை கொண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com