பதவி உயர்வுக்காக 14 மணி நேரம் வேலை.. ரூ.7.8 கோடி சம்பளம் கிடைத்தும் கடைசியில் நிகழ்ந்த சோகம்!
தொழில்முறை தளமான Blindஇல் இதுகுறித்த பதிவு பகிரப்பட்டுள்ளது. ஆனால், பெயர் குறிப்பிடப்படவில்லை. வைரலாகும் பதிவில், அந்த ஊழியர் தனது பதவி உயர்வு எவ்வாறு தனிப்பட்ட மகிழ்ச்சியை இழந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். வேலையில் மும்முரமாக இருந்ததால், தான் தவறவிட்ட பல முக்கியமான குடும்ப தருணங்களை அவர் நினைவு கூர்ந்துள்ளார். பதவி உயர்வு பெறுவதற்காக மூன்று வருடங்கள் மிகவும் கடினமாக உழைத்ததாகவும், காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை மொத்தத்தில் ஒருநாளைக்கு 14 மணிநேரம் திறம்பட வேலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவனத்தில் பதவி உயர்வு கேட்டதாகவும், அதன் காரணமாக வேலைப் பளு அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி, தொடர்ந்து அலுவலகப் பணிகள் மற்றும் கூட்டங்களில் கவனம் செலுத்தியதால் தனது மகளின் பிறப்புக்குச் செல்ல முடியாததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அன்றைய நாள் அதிகளவில் மீட்டிங் இருந்ததாகவும், இதன் காரணமாக மனைவி தன் மீது வெறுப்புற்றதாகவும், இதைத் தொடர்ந்தே தன்னிடமிருந்து விவாகரத்து கோரியிருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இறுதியில் தான் பதவி உயர்வை அடைந்ததாகவும், இதன்மூலம், தாம் ரூ.7.8 கோடி சம்பளம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்தப் பதவி உயர்வு கிடைத்தும் தனக்கு அதிக மகிழ்ச்சியைத் தரவில்லை என அதில் தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்தப் பதிவுக்கு, பயனர்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.