குழந்தை விவகாரம் | எழுத்தாளர் - எலான் மஸ்க் இடையே வெடித்த மோதல்!
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் தலைமை நிர்வாக இயக்குநருமான எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) துறையின் தலைவராக உள்ளார். அதிபர் டொனால்டு ட்ரம்ப்வின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க்குக்கு வெவ்வேறு பெண்கள் மூலம் இதுவரை 14 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இதற்கிடையே ஆஸ்லே செயின்ட் கிளார் என்ற எழுத்தாளர் எலான் மஸ்க்கின் குழந்தையை தான் பெற்றெடுத்ததாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது, உலக அளவில் பேசுபொருளானது. தனது குழந்தையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக ஆரம்பத்தில் இந்தச் செய்திகளைப் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என்றும், ஆனால் ஊடகங்களின் அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது என்றும் ஆஸ்லே செயின்ட் கிளார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், குழந்தையின் தனிப் பொறுப்பையும் தந்தைவழி பரிசோதனையையும் கோரி நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் மஸ்க்கிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அமைதி காத்து வந்த மஸ்க், நேற்று மெளனம் கலைத்தார். அவர், ”ஆஷ்லேயின் ஆண் குழந்தை என்னுடையதா என்று எனக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நான் அவருக்கு $2.5 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.21.4 கோடி) கொடுத்துள்ளேன் மேலும் அவருக்கு வருடத்திற்கு $500k (ரூ.4.3 கோடி) அனுப்புகிறேன்" என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
மஸ்க்கின் இந்தக் கருத்துக்கு ஆஷ்லே, "ஆலன் குழந்தை (நீங்கள் பெயரிட்ட) பிறப்பதற்கு முன்பே ஒரு சோதனை மூலம் உறுதிப்படுத்தும்படி நான் உங்களிடம் கேட்டேன். நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நீங்கள் எனக்குப் பணம் அனுப்பவில்லை, என்னைத் தண்டிப்பதாக நினைத்து பணத்தின் பெரும்பகுதியை நிறுத்திவிட்டீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் உங்கள் மகனை மட்டுமே தண்டிக்கிறீர்கள். நீதிமன்றத்தில் நீங்கள் கடைசியாக எடுத்த முயற்சி என் வாயை மூட முயற்சித்தது என்பது முரண்பாடாக இருக்கிறது. அதேநேரத்தில் நீங்கள் உங்கள் சொந்த சமூக ஊடக சேனலைப் பயன்படுத்தி என்னைப் பற்றியும் எங்கள் குழந்தையைப் பற்றியும் உலகம் முழுவதும் அவதூறான செய்திகளைப் பரப்புகிறீர்கள். நீங்கள் மிகவும் முரட்டுத்தனமான மனிதர்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகனை மஸ்க் மூன்று முறை மட்டுமே சந்தித்ததாகவும், அவரது வளர்ப்பில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் செயிண்ட் கிளேர் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் தனது குழந்தை பராமரிப்புக்கான தொகையை 60% குறைத்ததாகவும், இதன் காரணமாகவே தனது டெஸ்லா காரை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் செயிண்ட் கிளேர் கூறியதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.