டெஸ்லா நிறுவனத்தின் முதல் பறக்கும் கார்.. எலான் மஸ்க் கொடுத்த அப்டேட்!
2025ஆம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு வடிவிலான வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதன் காரணமாக, நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பலரும் அவஸ்தைக்கு ஆளாகின்றனர். நெரிசல் காரணமாக பயணங்களும் தாமதத்துக்கு உள்ளாகின்றன. ஆகையால், பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன. இந்நிலையில், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றிப் பேசி வரும் டெஸ்லா கார் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தற்போது உண்மையாகவே அதுகுறித்து ஓர் அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து, அதன் டெமோவைக் காண்பிக்க உள்ளதாக பாட்கேஸ்ட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் நடத்தவிருக்கும் அந்த மெமோ நிகழ்ச்சி, வரலாற்றிலேயே மறக்க முடியாக ஒரு நிகழ்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, ”அந்த கார்களுக்கு இறக்கை இருக்குமா” என்ற கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், ”கார் வெளியாவதற்கு முன்னர் அது பற்றிய எந்த தகவலையும் வெளியிட முடியாது என்றும், ஆனாலும், இதுவரை நடந்த வெளியீடுகளிலேயே அது ஒரு மறக்கமுடியாத தயாரிப்பாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1950களில் இருந்து பறக்கும் கார்கள் ஏதோ ஒரு வடிவத்தில் உள்ளன. ஆனால், அவை எதுவும் இதுவரை பறக்கும் காராக மாறவில்லை, ஏனெனில் பறப்பது ஓட்டுவதைவிட மிகவும் சிக்கலானது மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டது. ஒருவேளை, எலான் மஸ்க்கின், ‘ரோட்ஸ்டர்’தானாகவே பறக்காவிட்டால், அதற்கு இன்னும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிமம் பெற்ற விமானி தேவைப்படும். 2025 முடிவதற்குள் எலான் மஸ்க்கின் பறக்கும் கார், இறக்கைகள் அல்லது த்ரஸ்டர்களுடன் ஏதாவது ஒன்றைக் காட்டக்கூடும். எனினும், எலான் மஸ்க்கின் இந்தப் புதிய முயற்சி, உலகின் ஒரு புரட்சிகரமான பாய்ச்சலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

