உண்மையாகும் ‘பட்டணத்தில் பூதம்’ கார்... உலகின் முதல் பறக்கும் காரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி!

ரோட்டில் பயணித்து வானத்தை நோக்கி செல்லும் காரை முதன்முதலாக பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அனுமதி வழங்கியுள்ளது.
Flying Car
Flying Car Alef Aeronautics

பறக்கும் கார்கள் எல்லாம் நம் சிறுவயது ஹாலிவுட் படங்கள் மூலமாகவும், தமிழ் படமான பட்டணத்தில் பூதம் படத்தின் மூலமும் அனைவரது கற்பனையிலும் விரிந்திருக்கும்.

பட்டணத்தில் பூதம் கார்
பட்டணத்தில் பூதம் கார்

தற்போது நம் அத்தனை கற்பனை காட்சிக்கும் உயிரூட்டும் வகையில் ரோட்டில் பயணித்து ஆகாயத்தில் பறந்து செல்லும் காரை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்காவின் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனமானது இறங்கியுள்ளது. அதை சாத்தியப்படுத்துவதற்கான அத்தனை வழியையும் திறந்துவிட்டுள்ளது அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA).

அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த பறக்கும் கார், அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. மாடல் ஏ என அழைக்கப்படும் அந்நிறுவனத்தின் இந்த கார், அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) இடமிருந்து சிறப்பு விமான தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாகனம் முழுவதும் மின்சாரத்தை வைத்து மட்டுமே பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Flying Car
Flying Car Alef Aeronautics

ஃபெட்ரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), “எலெக்ட்ரிக்கல் வெர்டிகள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL)” என்னும் வாகனங்களுக்கான கொள்கைகளில் தீவிரம் காட்டுவதோடு, eVTOL மற்றும் தரை உள்கட்டமைப்பு இரண்டிற்கும் இடையேயான தொடர்புகளையும் கவனத்துடன் நிர்வகிக்கிறது" என்று அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதல்முறையாக பயன்பாட்டிற்கு வரும் பறக்கும் கார்!

சாலையில் பயணிக்கும் வழக்கமான கார்களை போன்று இல்லாமல், வானத்திலும் பறக்கும் திறன் கொண்ட கார் என்ற கனவென்பது மனித குலத்திற்கு பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. ரோட்டில் பயணித்து வானத்தில் பறக்கும் கார் என்றால் சுவாரஸ்யமான விஷயம் என்பதை எல்லாம் தாண்டி, தொழில்நுட்ப சவால்கள் அதிகம் நிறைந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக இன்ஜின்களை பயன்படுத்தி பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியில் இருந்த பல நிறுவனங்களுக்கு மத்தியில், மின்சாரத்தை பயன்படுத்தி பறக்கும் காரை தயார் செய்துள்ளது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம். இந்த வளர்ச்சியானது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒரு பறக்கும் வாகனத்திற்கு சான்றிதழ் கிடைத்துள்ளது இதுதான் முதல் முறையாகும்.

Flying Car
Flying Car Alef Aeronautics

Alef Aeronautics நிறுவனம் தனது முதல் முன்மாதிரியை 2016-ம் ஆண்டு உருவாக்கியது. இது ஒரு சாதாரண காரைப் போல ஓட்டும் திறனை பெற்றிருப்பது மட்டுமில்லாமல், வெர்டிகள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் திறனையும், மலிவு முதலிய முக்கியமான தேவைகளையும் வாடிக்கையாளருக்கு பூர்த்தி செய்கிறது. மாடல் ஏ என்ற இந்த காரானது, 200 மைல்கள் ஓட்டும் திறன் மற்றும் 110 மைல்கள் வரை பறக்கும் திறன் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் சான் மேடியோவில் அமைந்துள்ள இந்த பறக்கும் காரின் விலை $ 300,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இது 100 சதவீதம் மின்சாரத்தின் மூலம் இயங்கும் என்றும், ஒன்று அல்லது இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flying Car
Flying Car Alef Aeronautics

இந்த பாதையில் வெற்றிகரமாக பயணித்து வரும் Alef Aeronautics, 2019ஆம் ஆண்டு முதல் தங்கள் முன்மாதிரிகளை சோதனை செய்து வருவதாகவும், 2025-ம் ஆண்டின் 4வது காலாண்டில் “மாடல் A”ன் உற்பத்தி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. 2 நபர்கள் மட்டுமல்லாமல் 4 நபர்கள் பயணிக்கும் வகையிலான கூடுதல் மாடல்களை உருவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாடல் Z என்று பெயரிடப்படவிருக்கும் அக்காரானது, 2035ஆம் ஆண்டில் $35,000 ஆரம்ப விலையில் அறிமுகமாகும். மாடல் Z ஆனது 300 மைல்களுக்கு மேல் பறக்கும் வரம்பையும், 200 மைல்களுக்கு மேல் ஓட்டும் வரம்பையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் :

Alef Aeronautics நிறுவனம் 2015-ல் நான்கு தொழில்நுட்ப மேதைகளான டாக்டர் கான்ஸ்டன்டைன் கிஸ்லி, பாவெல் மார்கின், ஒலெக் பெட்ரோவ் மற்றும் ஜிம் டுகோவ்னி ஆகியோரால் நிறுவப்பட்டது. உண்மையான பறக்கும் காரின் முதல் ஓவியம் ஓட்டலில் நாப்கினில் வரையப்பட்டதாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது. காரை உருவாக்க சுமார் ஆறு மாதங்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com