வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க்.. ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! முடிவுக்கு வருகிறதா மோதல் போக்கு?
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்டு ட்ரம்ப் வருவதற்கு உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், தன்னுடைய நிதியுதவியை வாரிவழங்கியதோடு, சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கான பிரசாரத்தையும் அதிகரித்தார். இதைத் தொடர்ந்து அவருடைய அரசில், அதாவது அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DOGE துறையில் எலான் மஸ்க் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவருடைய ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில், அமெரிக்காவின் செனட் அவையில் ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மசோதா குறித்து எலான் மஸ்க் மறைமுகமாகச் சாடினார். தவிர, ட்ரம்பின் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, இந்த மசோதா குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இதன் காரணமாக அதிபர் ட்ரம்புவுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.
தன்னை விமர்சித்த மஸ்க்குக்கு எதிராக அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயேக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்பின் பெயர் இருந்ததாக எலான் மஸ்க் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த ட்ரம்ப், எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். தற்போது, அதிபர் ட்ரம்பும் இதை ஏற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர், "அவர் மன்னிப்பு கேட்டது மிகவும் நல்ல விஷயம்" என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் மீண்டும் விரைவில் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது.