முடிவுக்கு வந்ததா யுத்தம்? ட்ரம்ப் தந்த விருந்தில் கலந்துகொண்ட எலான் மஸ்க்!
சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டொனால்டு ட்ரம்ப் ஏற்பாடு செய்த அரசு இரவு விருந்தில் எலான் மஸ்கும் கலந்துகொண்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்வை 2வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த பெருமை உலக பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க்கையே சேரும். அவரது அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு அதிகம் நிதியளித்தவரும், பெரிய அளவில் ஆதரவளித்தவரும் எலான் மஸ்கே ஆவார். இதைத் தொடர்ந்து பதவியேற்ற ட்ரம்ப், நன்றிக்கடனாய் அவரை தன்னுடைய அமைச்சரவையின், அதாவது அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக நியமித்துக் கொண்டார். எலான் மஸ்கின் ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையில் ட்ரம்பின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தலைமை ஆலோசகர் பணியிலிருந்தும் மஸ்க் விலகினார்.
இந்த நிலையில், டொனால்டு ட்ரம்பின் மிகப்பெரிய கனவான ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) மசோதா தொடர்பாக இருவருக்கும் இடையே முட்டல் மோதல் தொடங்கியது. மசோதா தொடர்பாக அதிபர் ட்ரம்ப்பை மிகக் கடுமையாக எலான் மஸ்க் விமர்சித்தார். இதன் காரணமாக அதிபர் ட்ரம்புவுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. அவரது விமர்சனத்தால், மஸ்க்கின் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்ற பில்லியன் கணக்கான டாலர் மானியங்களை நிறுத்துவதாக ட்ரம்ப் பதிலடி கொடுத்தார். இது, அவருடைய டெஸ்லா நிறுவனத்தையும் பாதித்ததாகச் செய்திகள் வெளியாகின. பின்னர், அதிலிருந்து பின்வாங்கி அதிபர் ட்ரம்பிடம் எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டார். அதிபர் ட்ரம்பும் அதை ஏற்றுக் கொண்டார்.
அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் பெரிய அளவில் சந்திக்கவில்லை என்றாலும், ட்ரம்ப் கலந்துகொண்ட சில முக்கிய நிகழ்வுகளில் எலான் மஸ்கும் கலந்துகொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க்கின் நினைவிடத்தில் மஸ்க் கடைசியாக ட்ரம்புவுடன் கை குலுக்கினார். இந்த நிலையில், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டொனால்டு ட்ரம்ப் ஏற்பாடு செய்த அரசு இரவு விருந்தில் எலான் மஸ்கும் கலந்துகொண்டுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தில் எலான் மஸ்குடன், போர்ச்சுகலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். ட்ரம்ப் உடனான மோதலுக்குப் பிறகு மஸ்க் வெள்ளை மாளிகைக்கு மேற்கொண்ட முதல் வருகை இதுவாகும்.
எக்ஸ் தளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் மற்றும் முகமது பின் சல்மானுடன் ஒரு வாயில் வழியாக நுழைவதைக் காட்டுகிறது, அப்போது ட்ரம்ப் மஸ்க்கைப் பார்க்கிறார். ட்ரம்ப் மெதுவாக எலான் மஸ்க் தோளில் தட்டுகிறார். மஸ்க் பதிலுக்கு தலையசைப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ‘சகோதரர்கள் மீண்டும் ஒன்றாகிவிட்டனர்’என பயனர்கள் பதிவிட்டனர். எலான் மஸ்கிற்கும் ட்ரம்புவுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், தற்போது சமரசம் ஏற்பட்டதன் அடையாளமாக மஸ்க்கின் இந்த வருகை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மஸ்க் மீண்டும் ட்ரம்ப் உடன் இணைந்திருப்பதால் அமெரிக்காவில் மேலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.

