நேற்று ஏர்டெல்.. இன்று ஜியோ.. எலான் மஸ்க் நிறுவனத்துடன் அடுத்தடுத்து ஒப்பந்தம்.. யாருக்கு சாதகம்?
அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். இவரது விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவைகளை வழங்கி வருகிறது. இதற்காக, இந்தியாவிலும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது. இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் செயற்கைக்கோள் இணையச் சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் எலான் மஸ்க் நிறுவனம் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தியது. இதுதொடர்பான அறிக்கையில், "இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது. ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்வோம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஜியோ நிறுவனமும் ஷடார்லிங்க் உடன் ஒப்பந்தம்
இந்த நிலையில் ஏர்டெல்லை தொடர்ந்து அதன் போட்டியாளரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஷடார்லிங்க் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக ஜியோ நிறுவனம், "இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களை ஸ்பேஸ்எக்ஸ் பெறுவதற்கு உட்பட்டது. ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ், ஜியோவின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார்லிங்க் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், ஸ்டார்லிங்க் சேவைகளை நேரடியாக நுகர்வோர் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டுக்கு கொண்டுசேர்க்க முடியும் என்பதையும் ஆராய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு சேவையை நிறுவித் தந்து அதனை செயல்படுத்துவதை உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு நிறுவப்படும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு நம்பகமான இணையம் முழுமையாக அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஜியோவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஸ்பேஸ்எக்ஸ் உடனான ஒப்பந்தம் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
ஜியோவுக்கு என்ன லாபம்?
அதாவது, ஜியோ மறுவிற்பனையாளராகச் செயல்படும். அதன் 15,000+ கிளைகள் வழியாக ஸ்டார்லிங்க் வன்பொருளை விற்பனை செய்யும். தொலைதூரப் பகுதிகளில் நிறுவுதல் மற்றும் செயல்படுத்தல்களை ஜியோ கையாளும். மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்டார்லிங்கிடம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை இழப்பதை ஜியோ தவிர்க்கிறது. அடுத்து, விலையுயர்ந்த ஃபைபர் இணைப்பு இல்லாமல் கிராமப்புற சந்தைப் பங்கைப் பெறுகிறது. அடுத்த தலைமுறை இணைப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஜியோ தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறது. இப்போது, ஃபைபர் கிடைக்காத பகுதிகளுக்கு ஜியோவை விரிவுபடுத்த ஸ்டார்லிங்க் உதவுகிறது.
ஏர்டெல்லுக்கு ஸ்டார்லிங்க் ஏன் தேவை?
ஏர்டெல் தனது நிறுவனம் மற்றும் கிராமப்புற வணிகத்தை வலுப்படுத்த விரும்புகிறது. ஜியோ ஸ்டார்லிங்குடன் கூட்டு சேர்ந்ததால், ஏர்டெல்லுக்கு வேறு வழியில்லை. ஏர்டெல்லின் ஒன்வெப் முதலீடு அதை செயற்கைக்கோள் பிராட்பேண்ட் தலைவராகவும் ஆக்குகிறது.
ஜியோ vs ஏர்டெல் - ஸ்டார்லிங்கிலிருந்து யார் அதிக நன்மை அடைகிறார்கள்?
🔹 ஜியோ வெகுஜன நுகர்வோர் தத்தெடுப்பு மற்றும் கிராமப்புற விரிவாக்கத்தில் வெற்றி பெறுகிறது. ஜியோ ஒவ்வொரு இந்திய வீட்டையும் ஸ்டார்லிங்கில் பயன்படுத்த விரும்புகிறது.
🔹 ஏர்டெல் நிறுவனம் மற்றும் 5G உள்கட்டமைப்பு ஆதரவில் வெற்றி பெறுகிறது. ஏர்டெல் ஒவ்வொரு வணிகத்தையும் பயன்படுத்த விரும்புகிறது.
ஒப்பந்தம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி
இந்த ஒப்பந்தம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார். அவர், “கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இந்தியாவில் சேவைகளை வழங்க ஒப்பந்தங்களை அறிவித்துள்ளன. செயற்கைக்கோள் இணையத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் தவிர வேறு எந்த வாய்ப்பும் இருக்காது. அமெரிக்காவில் மோடியை சந்தித்தபோது, அமெரிக்காவின் சூப்பர்-அதிபர் எலான் மஸ்க் இதை கட்டாயப்படுத்தினாரா? மோடி அரசு எலான் மஸ்க் மற்றும் அமெரிக்காவிற்கு முன் வளைந்துகொடுப்பது நமது உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழிவை ஏற்படுத்தும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.