பொருளாதார போர்.. சாப்பாட்டுக்கே வழியில்லை.. உடல் உறுப்புகளை விற்கும் ஈரான் மக்கள்!
அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் ஈரானில் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கி, மக்களை உடல் உறுப்புகளை விற்பனை செய்யத் தள்ளியுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக மக்கள் கடன்களை அடைக்கவும், அன்றாட செலவுகளைச் சமாளிக்கவும் போராடுகின்றனர்.
செய்தியாளர் - M.மீரா
ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மீண்டும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றும், பொருளாதார நடவடிக்கைகளே ஈரானை கடுமையாகப் பாதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதர நடவடிக்கைகளால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டின் நாணய மதிப்பு (ரியால்) கடுமையாக வீழ்ச்சியடைந்து, அதிவேக பணவீக்கம் (Hyperinflation) ஏற்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளதால், சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வங்கி பரிவர்த்தனை அமைப்பான 'ஸ்விப்ட்' (SWIFT) தளத்திலிருந்து ஈரான் நீக்கப்பட்டதால், வெளிநாட்டு வணிகம் மற்றும் முதலீடுகள் முடங்கியுள்ளன.
இவ்வாறு ஈரானில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு மக்கள் தங்களது கடன்களை அடைக்கவும், குடும்பத்தின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவும் சிறுநீரகம், கண் கருவிழி உள்ளிட்ட உடல் உறுப்புகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் இன்டர்நேஷனல் ஊடகம் நடத்திய ஆய்வில், டெலிகிராம் உள்ளிட்ட ஆப்களில் உடல் உறுப்புகளை விற்பனை செய்வதற்கான விளம்பரங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மே மாத இறுதி முதல் அக்டோபர் மாத இறுதி வரை டெலிகிராம் ஆப்களில் வெளியான 600-க்கும் மேற்பட்ட விளம்பரங்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விளம்பரங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் அல்லது திசுக்களை விற்பனை செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை, கண் கருவிழி, கல்லீரல் திசுக்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய மக்கள் முன்வந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சிலர் தங்களது குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளை விற்கவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. வீட்டு வாடகை செலுத்த முடியாமலும், அன்றாடத் தேவைகளுக்குப் பணம் இல்லாமலும் தவிக்கும் தொழிலாளர்கள் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஈரானின் தொழிலாளர் நலன் சார்ந்த செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானின் மத்திய பகுதியில் உள்ள ஃபர்ஹாங் ஹொசைனி தெரு, 'சிறுநீரகத் தெரு' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு சிறுநீரகத்தை விற்க விரும்புபவர்கள் நேரடியாகவே தங்களுக்கான வாங்குபவர்களைத் தேடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போர் உடனடியாக முடிவுக்கு வந்தாலும் ஈரான் தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று எச்சரித்துள்ளார். மேலும், ஈரானின் நாணய மதிப்பு சுமார் 25 சதவீதம் சரிந்துள்ளதாகவும், பணவீக்கம் கடந்த மாதம் 90 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சாதாரண மக்களின் அடிப்படை தேவைக்கான வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது.

