மத்திய கிழக்கிற்கு வந்த அமெரிக்காவின் 3-வது போர்க்கப்பல்.. ஈரானுடன் மீண்டும் போர் வெடிக்குமா?
செய்தியாளர் - M.மீரா
ஈரான் மீது புதிதாக ராணுவத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறியிருந்த நிலையில், அமெரிக்கா தனது 3வது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே, 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அங்கு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது USS தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt) கப்பலும் வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய ராணுவ நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் பெயரைக் கொண்ட இந்தப் போர்க்கப்பல் அணுசக்தியில் இயங்கக்கூடியது. 1986-ம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையில் இணைக்கப்பட்ட இந்தக் கப்பலில் 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்ற முடியும். மேலும், எப்-18 உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் இது கொண்டுள்ளது.
தற்போது, மத்திய கிழக்கு பகுதியில் USS ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் USS ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் ஆகிய 2 விமானம் தாங்கி கப்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுடன் ரூஸ்வெல்ட் கப்பலும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், 2,000-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களைக் கொண்ட Makin Island Amphibious Ready Group படையும் அப்பகுதிக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் ஏற்கனவே அமெரிக்காவின் 40,000 முதல் 50,000 வீரர்கள் வரை நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து சுமார் 7,000 கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், எப்-35, எப்-22, எப்-15 மற்றும் எப்-16 போன்ற நவீன போர் விமானங்களும் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அமெரிக்கா முதலில் தாக்குதல் நடத்தும் வரை ஈரான் காத்திருக்காது என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி, மற்றொரு தாக்குதலுக்குத் தயாராக நேரம் வாங்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான அடுத்தகட்ட ராணுவத் தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அமெரிக்க ராணுவம் எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், 3வது விமானம் தாங்கி போர்க்கப்பலின் வருகை மீண்டும் போர் வெடிப்பதற்கான அறிகுறியா அல்லது ஈரானுக்கு அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

