“இந்தியா தாக்கப்பட்டால்..” மோடிக்காக களத்தில் குதித்த ட்ரம்ப்.. திரும்பிப் பார்க்கும் உலக நாடுகள்!
பிரதமர் மோடிக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மாபெரும் வாக்குறுதி அளித்திருப்பது உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ”மோடி தலைவராக இருந்து இந்தியா தாக்கப்பட்டால், நாங்கள் உதவுவோம்” என அவர் வாக்குறுதி அளித்திருப்பதுதான் உலக நாடுகளிடம் கவனம் ஈர்த்துள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான ஜி7 (G7) உச்சி மாநாடு (52-ஆவது) பிரான்சின் எவியான் (Evian) நகரில் நடைபெற்ற நிலையில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாட்டுத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இவர்களுடன் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா, பிரேசில், கென்யா, எகிப்து மற்றும் தென் கொரியா ஆகிய நாட்டுத் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு இரு தலைவர்களும் நேரில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஓமன் கடற்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 3 இந்தியக் கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
அப்போது, சர்வதேசக் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் (Freedom of Navigation) உறுதி செய்யப்பட வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் லட்சக்கணக்கான இந்தியக் கடற்படை வீரர்கள் பணியாற்றுவதால், அவர்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், இந்திய வீரர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார். மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தையில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பின்னர் இருதலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிபர் ட்ரம்ப். அப்போது பேசிய அவர், “இந்தியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அவர்களைப் பாதுகாக்க நாங்கள் உறுதியாக நிற்போம். யாராவது அந்த மனிதரை (மோடியை) தாக்கினால், நாங்கள் அங்கு இருப்போம். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை... நரேந்திர மோடிதான் இந்தியாவின் தலைவராக நீடிக்க வேண்டும். ஒருவேளை, புதிய தலைவர் யாராவது வந்தால், எனக்குத் தெரியாது” என்றவர், பிரதமர் மோடியையும் பாராட்டினார். அவர், ”மோடி ஒரு மிகக் கடினமான பேச்சுவார்த்தையாளர். அவர் பார்ப்பதற்கு ஒரு தேவதையைப்போல மிக அழகாக, அமைதியாக காட்சியளிப்பார். அதனால், அவர் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் கடுமையானவர்" என்று குறிப்பிட்டார்.

