”ஈரான் மீது மீண்டும் தாக்குதல்..” அதிபர் ட்ரம்ப் அதிரடி முடிவு.. இறுதி ஒப்பந்தம் என்னவாகும்?
ஈரானுக்கு எதிராகப் போர் நிறுத்தம் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ”ஈரான் ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கக்கூடும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தியின் பிரச்னையாகவும் உருமாறியது. இதற்கிடையே, பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இதனால் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. இதனைக் குறிப்பிட்டு ஈரான் போர் முடிவடைவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். மேலும், போர் முடிவடைந்ததாகவும், அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
இருதரப்பிலும் காணொளி வாயிலாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், ஜூன் 19ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இது நிறைவு செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ”ஈரான் ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கக்கூடும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பேசிய அவர், “இது இறுதியானதல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலோ, ஈரான் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றாலோ, நாங்கள் மீண்டும் அவர்கள் மீது குண்டுகளை வீசத் தொடங்குவோம்... ஏனென்றால், அவர்கள் 47 ஆண்டுகளாகத் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

