ஆப்பிளைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை.. தொடரும் ட்ரம்பின் நடவடிக்கை!
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உள்நாடு தவிர்த்து உலக நாடுகளையும் நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறார். குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, பாஸ்போர்ட் கெடுபிடி, நிதியுதவி நிறுத்தம், ஊழியர்கள் குறைப்பு, கனடா, கிரீன்லாந்து, காஸா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர திட்டம் எனப் பல அதிரடி நடவடிக்கைகள் அவற்றுள் அடக்கம்.
தவிர, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா எனவும் மாற்றினார். இதுதவிர, வேறு புதிய அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் அமெரிக்காவில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்றொரு நிறுவனமான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், “வரிவிதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் மற்றும் இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும். இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அவர்கள் இங்கு தொழிற்சாலை அமைத்தால், வரி இருக்காது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. இது, ஜூன் மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படலாம்" என்று கூறினார்.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை முக்கியமாக வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது. இந்த வரிவிதிப்பு, குறிப்பாக வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 46% வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.