ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி.. எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உள்நாடு தவிர்த்து உலக நாடுகளையும் நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறார். குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, பாஸ்போர்ட் கெடுபிடி, நிதியுதவி நிறுத்தம், ஊழியர்கள் குறைப்பு, கனடா, கிரீன்லாந்து, காஸா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர திட்டம் எனப் பல அதிரடி நடவடிக்கைகள் அவற்றுள் அடக்கம். தவிர, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா எனவும் மாற்றினார். இதுதவிர, வேறு புதிய அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் அமெரிக்காவில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ”அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால் ஆப்பிள் நிறுவனத்தின் மீது 25% வரி விதிக்கப்படும்” என அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், “அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை பல காலத்துக்கு முன்பே, டிம் குக்குக்கு நான் வலியுறுத்திவிட்டேன். இந்தியா என்றில்லை, அமெரிக்காவுக்கு வெளியே எங்கும் உற்பத்தி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கண்டிப்பாக 25 சதவீத வரியை ஆப்பிள் எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தச் செய்தி வெளியானதும், சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 3.7% சரிந்துள்ளன. எனினும், ஆப்பிள் நிறுவனத்திற்கு ட்ரம்ப் எந்த காலக்கெடுவையும் வழங்கவில்லை. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்டு, இந்தியாவில் உற்பத்தி ஆலையைத் தொடங்கவிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். தற்போது ஆப்பிள் ஐபோன் நிறுவனம் கிட்டத்தட்ட 60 மில்லியன் ஐபோன்களை ஆண்டுதோறும் அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது. அதன் உற்பத்தியில் 80 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ஜூன் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கவும் பரிந்துரைத்துள்ளார்.