”ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டும்” - போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் புதின் கோரிக்கை!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கருங்கடல் பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்த கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும், அவர் விரைவில் இறந்துவிடுவதாகத் தெரிவித்திருந்தது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”போர்க் களத்தில் முழுமையாக எங்கள் கை ஓங்கியுள்ளது. அவர்களை மொத்தமாக அழித்தொழிப்பேன் என ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போது அதன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். ஒரு திறமையான அரசாங்கத்தைத் தேர்வு செய்ய, உக்ரைனை ஐ.நா. கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். தனது பதவிக்காலம் முடிந்தும் ஆட்சியில் இருக்கும் ஜெலென்ஸ்கி, எந்தவொரு சமாதான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட சட்டப்பூர்வ தகுதியைக் கொண்டிருக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள உக்ரைன், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுக்கும் அமைதி ஒப்பந்தங்களை தாமதப்படுத்தும் வகையில், முக்கியத்துவமற்ற காரணங்களை புடின் முன்வைக்கிறார். மேலும், புடினின் கருத்துகள் ரஷ்யா அமைதியைப் பேச்சுவார்த்தை பற்றி தீவிரமாக இல்லை என்பதை நிரூபித்துள்ளது” என ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை, ”உக்ரைனின் ஆட்சி அதன் அரசியலமைப்பு மற்றும் மக்களால் தீர்மானிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.