நாடு கடத்தப்படுவாரா எலான் மஸ்க்.. ட்ரம்ப் சொன்ன சூசக பதில்!
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிகப்பெரிய கனவான ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) மசோதாவுக்கும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்கிற்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, அந்த மசோதாவை எலான் மஸ்க் விமர்சித்து வருகிறார். இதன் காரணமாகவே அவர்களுக்குள் முட்டல் மோதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் குறித்து மோசமாக விமர்சித்த நிலையில், பிறகு அதிலிருந்து பின்வாங்கி எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டார். அதை, ட்ரம்ப் பெரும்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. ”ட்ரம்ப் நிறைவேற்ற உள்ள வரி சீர்திருத்த மசோதா நாட்டுக்கு பெரும் சுமையாக அமையும் என்றும் அது மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால் தான் புதிய கட்சி தொடங்குவது உறுதி” என்றும் மஸ்க் கூறியிருந்தார்.
இதுதொடர்பாகப் பதிலளித்த அதிபர் ட்ரம்ப், “வரலாற்றில் எந்த மனிதரையும்விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால், கடையை காலி செய்துவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
அதற்கு எலான் மஸ்க், “ட்ரம்ப் விரும்பினால் எனது நிறுவனங்களுக்கான அரசு மானியங்களை நிறுத்திக்கொள்ளட்டும்” எனப் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், ”எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா” என்ற கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், "மஸ்க்கை நாடு கடத்த முடியுமா எனத் தெரியாது. அதற்கான சாத்தியக் கூறுகளைப் பார்க்க வேண்டும். எலான் மஸ்கின் நிறுவனங்கள் தொடர்பாக DOGE அமைப்பை விசாரிக்கச் சொல்லலாம். நிறைய சலுகைகளை அவர் அனுபவித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அரசின் செலவினங்களைக் குறைக்கும் பொருட்டு, DOGE அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைமை ஆலோசகராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டிருந்தார். ஆறு மாதம் கழிந்த நிலையில், அதிலிருந்து அவர் கடந்த மாதம் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.