”8 போர்களை சுலபமாக நிறுத்தியுள்ளேன்., ரஷ்யா - உக்ரைன் மோதல் கடினமாக உள்ளது” - டிரம்ப்!
ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்தாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் கடினத்தன்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஜெனிவாவில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், 4 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான், ரஷ்யா போர் தீர்ப்பதற்கு கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான், பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்டப் போர்களை தான் நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதே சூழலில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரையும் நிறுத்த முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது, ”தனது தலைமையிலான அரசு 10 மாதங்களில் 8 போர்களை சுலபாக நிறுத்தியுள்ளது. ஆனால், இந்த ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தீர்ப்பதற்கு கடினமாக உள்ளது. அமைதியை நிலை நாட்ட இரு தரப்புகளின் ஒத்துழைப்புத் தேவை. நாம் அதை அடைவோம் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடினமாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டிருப்பது உலக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில் தான், அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமெரிக்கத் தலைமையில் இருநாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. இதில், ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், துருக்கியில் இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை நடந்திருந்தது. அதில், எந்த உடன்பாடும் எட்டியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

