IND - PAK போர் நிறுத்தம் | மீண்டும் மீண்டும் உறுதிபடக் கூறிய ட்ரம்ப்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நிலவிய மோதலை, தாம் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து, பாகிஸ்தான் முதலில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக நமது நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரு நாடுகளுக்கிடையே தாக்குதலைத் தடுக்கும் விதத்தில், தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்திய அரசு, இதை தொடர்ந்து மறுத்து வருகிற நிலையில், டொனால்டு ட்ரம்ப், இந்த விஷயத்தை இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை கூறியுள்ளார். தொடர்ந்து தற்போதும் கூறிவருகிறார்.
அந்த வகையில், தற்போதும் அதே கருத்தை முன்வைத்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நிலவிய மோதலை, தாம் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் சண்டையைத் தொடர்ந்தால் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என்று பிரதமர் மோடியை எச்சரித்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார். மோதலை உடனடியாகக் கைவிடாவிட்டால், இருநாடுகள் மீதும் 250% வரி விதிப்பேன் என்று மிரட்டியதாகவும், இந்த மிரட்டலே ஒரு அணுசக்திப் போரைத் தடுத்ததாகவும் அவர் மீண்டும் உரிமை கோரியுள்ளார்.

