உக்ரைன் போர் நிறுத்த விவகாரம்.. ட்ரம்ப் - புடின் சந்திப்பு திடீர் ரத்து.. காரணம் இதுதான்!
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சந்திக்கவிருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் புடாபெஸ்ட்டில் சந்திக்கவிருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தனது நிலப்பரப்பைக் வழங்க வேண்டும், படைகளைக் குறைக்க வேண்டும் மற்றும் நேட்டோவில் சேரக்கூடாது என்பது போன்ற கடுமையான நிபந்தனைகளை ரஷ்யா மீண்டும் வலியுறுத்திய நிலையில், அமெரிக்கா புடினுடனான சந்திப்பை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதையே அதன் நிபந்தனைகள் காட்டுவதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

