’ஆயுதம் வேண்டுமா..?’ சீனாவைச் சீண்டிய ட்ரம்ப்.. கண்டுகொள்ளாத ஜின்பிங்.. கவனம் பெற்ற விவாதம்!
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான அதிபர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்கிடம், தங்கள் நாட்டு ஆயுதங்களை வாங்க சீனாவுக்கு விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், சட்டப்படி சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அமெரிக்கா சீனப் பொருட்கள் மீது விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரிகள் மற்றும் அதற்குப் பதிலடியாகச் சீனா விதிக்கும் வரிகள் இரு நாட்டு வர்த்தக உறவையும் கடுமையாகப் பாதித்துள்ளன. தவிர, தைவானைச் தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி எனச் சீனா உரிமை கோரி வரும் நிலையில், தைவானின் தற்காப்பிற்காக அமெரிக்கா பல பில்லியன் டாலர் மதிப்பிலான நவீன ஆயுதங்களை வழங்கி வருகிறது. மேலும், தெற்குச் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ராணுவக் விரிவாக்கமும், அப்பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளின் கடற்படை ரோந்து நடவடிக்கைகளும் ராணுவ மோதல் அபாயத்தை அதிகப்படுத்தியுள்ளன.
இதற்கிடையே, அரசு முறை பயணமாக சமீபத்தில் அமெரிக்க சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உற்சாக வரவேற்பளித்தார். அதன்பிறகு, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள், பரஸ்பர வரிகள் மற்றும் அமெரிக்க விவசாயிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து விவாதம் எழுந்தது. அப்போது ட்ரம்ப், "அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது. சீனா அமெரிக்க ஆயுதங்களை வாங்க விரும்புகிறதா" என்று ஷி ஜின்பிங்கிடம் நேருக்கு நேராகக் கேட்டதாக, அமெரிக்காவுக்கான சீனத் தூதர் டேவிட் பெர்டூ (David Perdue) சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தைவானுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுத ஆதரவை நியாயப்படுத்தும் வகையிலும், அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தகக் கொள்கையை வெளிப்படுத்தும் வகையிலும் ட்ரம்ப் இந்த உரையாடலை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சட்டப்படி சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளன. தைவான் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில், இந்த தகவல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

