பேஸ்புக், இன்ஸ்டாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ட்ரம்ப்! என்ன சொல்கிறது மெட்டா நிறுவனம்?

பேஸ்புக், இன்ஸ்டாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ட்ரம்ப்! என்ன சொல்கிறது மெட்டா நிறுவனம்?
பேஸ்புக், இன்ஸ்டாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ட்ரம்ப்! என்ன சொல்கிறது மெட்டா நிறுவனம்?

கடந்த ஜனவரி 6, 2021-ம் ஆண்டு அமெரிக்காவின் கேபிடல் கட்டடத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்களை, டிரம்ப் தனது சமூக வலைதள கணக்குகளில் பாராட்டினார். இதனையடுத்து அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் 2 ஆண்டுகளுக்கு மெட்டாவால் முடக்கப்பட்டன. இந்நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதளகணக்குகளை மீண்டும் இயக்குவதற்கான அறிவிப்பை, மெட்டா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

தடை நீக்கமும், பின்னணியும்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3, 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டிய டிரம்ப், பல மாகாணங்களில் அதுபற்றி வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரம்ப் சமூக வலைதளங்கள் வாயிலாக கலவரத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை பாராட்டினார். இதனையடுத்து அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் காலவரையின்றி முடக்கப்பட்டன.

பின்னர் இந்த விவகாரத்தை விசாரித்த மெட்டா குழு, டிரம்புக்கு 2 ஆண்டுகளுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இயங்க தடை விதித்தது. இந்நிலையில் வருகின்ற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் பரப்புரையை மையமாக கொண்டு, கடந்த வாரம் டிரம்ப்பின் சட்டக்குழு, மெட்டாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் டிரம்பை மீண்டும் சமூக வலைதளக்கணக்குகளில் இயங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தடை நீக்கப்படுகிறது ஆனால் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது!

அதை ஏற்று, ட்ரம்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டிரம்ப் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயங்க சில கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மீண்டும் செய்யும் ஒவ்வொரு விதிமீறலுக்கும் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டிரம்ப்பின் கருத்துக்கள் மீண்டும் அவரது பேஸ்புக் பக்கம், விளம்பரங்கள் வாயிலாக லட்சக்கணக்கான அமெரிக்க மக்களை சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள்வதற்கு ஏதுவாக திட்டங்களை வகுத்து வருவதாகவும் மெட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கப்பட்ட பின்னும் ஒரு ட்வீட் கூட போடாத டிரம்ப்! ஏன்?

ஏற்கனவே டிரம்பின் இடைநிறுத்தப்பட்ட ட்விட்டர் கணக்கு, நவம்பரில் எலான் மஸ்க்கால் மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும் டிரம்ப் இதுவரையிலும் ஒரு ட்வீட் கூட செய்யவில்லை. இதற்கு டிரம்ப் உருவாக்கிய ட்ரூத் சோஷியலின் பங்குகள், வலுவான மாற்று தளத்தை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் ஆகியவையே உண்மையான காரணங்கள் என கூறப்படுகின்றன.

டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குழுமம், ட்ரூத் சோசியலில் 1 பில்லியன் டாலருக்கு மேலாக முதலீடு செய்துள்ளது. அதில் உள்ள முக்கிய விதியின்படி, டிரம்ப் தனது மற்ற சமூகக் கணக்குகளை மீட்டெடுத்தாலும், பிரத்தியேகமாக ட்ரூத் சோசியலிலேயே முதலில் பதிவிட உறுதியெடுத்துள்ளார். முதலில் ட்ரூத் சோசியலில் பதிவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் பதிவிடுவதன் மூலம், டிரம்ப் இந்த விதியை மீறாமல் பார்த்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் பேஸ்புக்கின் பங்கு!

டிரம்ப் குறைந்தபட்சம் ட்ரூத் சோஷியலை தனது மையமாக மாற்ற முயன்றாலும், அது பேஸ்புக்கால் அடையக்கூடிய அணுகலையோ, அதிர்வலையையோ பெறாது என்பதே உண்மை.

டிரம்ப் பேஸ்புக்கில் 34 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். மேலும் அவரது முந்தைய பிரச்சார முயற்சிகளில் பேஸ்புக் விளம்பரங்கள் முக்கிய அங்கம் வகித்தன. உண்மையில், டிரம்பின் குழு 2019-ம் ஆண்டில் மட்டும் 20 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை பேஸ்புக் விளம்பரங்களுக்காக செலவழித்தது. மேலும் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான முதன்மையான ஆயுதமாக அவரது ட்வீட்கள் மாறியது. அதே வேளையில், அவரது நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக பேஸ்புக் இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில், டிரம்பின் குழு ஏற்கனவே தங்கள் அடுத்த பேஸ்புக் விளம்பரங்களைத் தூண்டுவதற்கான உத்திகளை வகுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மெட்டா குறிப்பிடுவது போல முடிவுகளை கையாள்வதை மக்களே தீர்மானிக்க முடியும். இருப்பினும் டிரம்பின் குழு, கடந்த காலத்தில் எடுத்த பேஸ்புக் விளம்பரங்களுக்கான கையாளுதல், இலக்கு அணுகுமுறைகள் உள்ளிட்டவை யாவும் தடை நீக்க விவகாரத்தை மீண்டும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.

- ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com