2,00,000 பேருக்கு ஆப்பு.. அமெரிக்காவில் முதன்முறை.. ஆக்ஷனில் இறங்கிய ட்ரம்ப்!
அமெரிக்காவில் வணிக மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுவிட்டு, பின்னர் தஞ்சம் (Asylum) கோரிய 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன், அவர்களது விசாக்களை ரத்து செய்ய திட்டமிடுகிறது? வாருங்கள்.. பார்க்கலாம்.
அமெரிக்காவில் மீண்டும் அதிபரான டொனால்டு ட்ரம்ப், பதவியேற்ற நாள்முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதுடன் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அதில் விசா கட்டணம், குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு என அதிரடி காட்டி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் வணிக மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுவிட்டு, பின்னர் சட்டவிரோதமாகத் தஞ்சம் கோரும் முறையைத் தடுக்கும் வகையில், 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்துசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. 2016 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் B1 (வணிகம்) மற்றும் B2 (சுற்றுலா) விசாக்களைப் பெற்று, அமெரிக்காவிற்குள் நுழைந்த பின் தஞ்சம் கோரிய அல்லது தற்போது கோரிவரும் சுமார் 2,00,000 வரையிலான வெளிநாட்டினர் இதில் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இது நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரேகட்டமாக இத்தனை பேரின் விசாக்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ட்ரம்ப் நிர்வாகம், ஏற்கெனவே கடந்த 18 மாதங்களில் குற்றச்செயல்கள் மற்றும் இதர விதிகளின் அடிப்படையில் சுமார் 1,75,000 விசாக்களை ரத்து செய்துள்ளது. எனினும், விசாக்கள் ரத்து செய்யப்பட்டாலும், அது உடனடியாக அவர்களைக் கட்டாயமாக நாட்டிலிருந்து வெளியேற்றுவதைக் குறிக்காது. இருப்பினும், அவர்கள் தங்களது சுற்றுலா அல்லது வணிக விசா அந்தஸ்தை முழுமையாக இழந்துவிடுவார்கள். அவர்கள் நிலுவையில் உள்ள தங்கள் குடியேற்றக் கோரிக்கை வழக்குகளைத் தொடர்ந்து நடத்தலாம், ஆனால் அவர்களின் தற்போதைய தற்காலிகப் பயண அனுமதி அந்தஸ்து மாற்றப்படும் அல்லது மறுவகைப்படுத்தப்படும்.
இதுகுறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டூ (Christopher Landau), "அமெரிக்காவின் தற்காலிக விசா முறையைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் போலியான அல்லது முறையற்ற புகலிடக் கோரிக்கைகளை வைப்பவர்களைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

